ஆட்சியாளர்களாக இருந்தவர்கள் அனைவரும் கொள்ளையர்களாவர்

Report Print Rakesh in அரசியல்

இலங்கையின் வறுமை நிலைக்கு 72 வருடங்களாக ஆட்சியாளர்களாக இருந்த கொள்ளையர்களே காரணம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்டத்துக்கான மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"இலங்கையில் உள்ள எல்லாப் பிரதேச மக்களும் ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். ஆட்சியாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றிக்கொள்வதற்கும் தங்களது இருப்பைத் தக்க வைத்துக்கொள்வதற்காகவுன் தங்கள் மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தினார்கள்.

அவர்கள் ஆட்சிப்பீடமேறி குபேரர்களாக மாறிக் கொள்ளையடித்ததுடன் நாட்டை இலஞ்ச, ஊழலில் கொடிகட்டிப் பறக்கவிட்டார்களே தவிர வேறு எதனையும் செய்யவில்லை.

அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கடன் தொடர்பாக கதைத்த விடயங்களை வைத்துப் பார்க்கின்றபோது எமது நாடு எதியோப்பியாவை விட கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நாடாகக் காணப்படுகின்றது.

எமது நாடு ஒரு காலத்தில் செல்வந்த நாடாக அனைத்து வளங்களும் உள்ள நாடாக இருந்தது. தற்போதும் அனைத்து இனத்தவரையும் ஒரு கொடியின் கீழ்க் கொண்டு வந்தால் - அனைத்து வளங்களையும் பாதுகாத்தால் எமது நாட்டை செல்வந்த நாடாக மீண்டும் கொண்டுவர முடியும். ஆனால், அவ்வாறான நாட்டை வறிய நாடாக மாற்றியவர்கள் யார்?

பிணைமுறி மோசடியில் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமல்ல ராஜபக்ச குடும்பத்தினரும் ஈடுபட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. ஆயிரத்து நூறு கோடி ரூபாக்களை கொள்ளையடிப்பதற்கும் ராஜபக்ச அரசு ஆதரவு வழங்கியுள்ளது.

அப்போது மத்திய வங்கி ஆளுநராக இருந்த அஜித் நிவாட் கப்ராலும் அவரது சகோதரிகளும் நாட்டின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் பாவிகளாக மாறியிருக்கின்றனர். அது மாத்திரமின்றி எயார் பஸ் கொள்வனவிலும் பல கோடி இலஞ்சம் பெறப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளைக்கூட்டமே எமது நாட்டை இந்த வறுமை நிலைக்கு தள்ளிய பாவிகள்.

வறுமை கூடிய மாகாணமாக வடக்கு மாகாணமே காணப்படுகின்றது. வறுமையால் வாடுகின்ற மக்கள் தமிழ் மக்களேயாவர். தொழில் இன்றி இருப்பவர்களில் 10 வீதமானவர்கள் வடக்கு மாகாணத்தைச் சேந்தவர்களாக இருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் எந்தவிதமான அபிவிருத்தியையும் காணாமல் தேர்தல் காலத்தில் மாத்திரம் யானையைத் தருகின்றேன், பூனையைத் தருகின்றேன் எனப் போலி வாக்குறுதிகளை வழங்குகின்றார்களே தவிர இதில் இருந்து மாற்று வழிகளை யாரும் பெற்றுத்தரவில்லை.

எனவே, வன்னி மக்கள் விழித்தெழ வேண்டும். நாளையில் இருந்து உங்கள் செயற்பாட்டை முன்னெடுங்கள். அது இன, மத வேறுபாடின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.