முஸ்லிம் காங்கிரஸ், கூட்டமைப்புடன் கூட்டணி அமைக்க மாட்டோம் - ஜே.வி.பி. திட்டவட்டம்

Report Print Rakesh in அரசியல்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எவ்வித பேச்சும் நடத்தப்படவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அறிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உட்பட எமது கொள்கையுடன் இணங்கக்கூடிய சிவில் அமைப்புகளையும் இணைத்துக்கொண்டு, பரந்துபட்ட கூட்டணியை அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பேச்சுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனவே, வெகுவிரைவில் பலமான சக்தியாக வருவோம் என்று கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியால் இன்று விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிவில் அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பரிசீலித்து வருகின்றது எனவும், இதற்கான பேச்சும் நடத்தப்பட்டு வருகின்றது எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை. அது ரவூப் ஹக்கீமின் தனிப்பட்ட கருத்தாகும்.

கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் ஆகியவற்றுடன் எவ்வித பேச்சுகளையும் ஜே.வி.பி. நடத்தவில்லை.

அக்கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் நோக்கமும் எமது கட்சிக்கு இல்லை. தேசிய மக்கள் சக்தியின் கீழ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி. போட்டியிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி ஊடாகவே ஜே.வி.பி. போட்டியிடும் என்றும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.