நட்பு கட்சிகள் என்ற ரீதியில் கூட்டமைப்பு - கூட்டணி பேச்சு

Report Print Rakesh in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் முற்போக்குக் கூட்டணியும் நட்பு கட்சிகள் என்ற முறையில் பேச்சுகள் நடத்தும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானத்தின்படி வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் போட்டியிடுவதானால், அது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுடன் பேசி தீர்மானிப்போம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே வேலு குமார் எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் முற்போக்குக் கூட்டணியும் பகைமை கட்சிகள் அல்ல. இரண்டும் நட்பு கட்சிகள். எங்களுக்கு இடையில் இருக்கக்கூடிய ஒருசில முரண்பாடுகள் நட்பு முரண்பாடுகள்.

அவை பகைமை முரண்பாடுகள் அல்ல. எல்லா தமிழ்க் கட்சிகளும் ஒன்று சேருதல் என்பது நல்ல ஒரு கனவு. ஆனால், நடைமுறை சிக்கல்கள், வடக்கு - தெற்கு அரசியல் கள நிலவரங்கள், அரசு - எதிரணி முரண்பாடுகள் காரணமாக எல்லா தமிழ்க் கட்சிகளும் ஒரே அணியாக ஒன்றுசேர முடியாது.

ஆகையால் எங்கெங்கே ஒருமித்து செயற்பட முடியுமோ, அங்கெல்லாம் நாம் ஒருமித்து செயற்படலாம். கூட்டமைப்புக்குள் மூன்று கட்சிகளும், கூட்டணிக்குள் மூன்று கட்சிகளும் உள்ளன.

இந்நிலையில் நாம் ஒன்று சேர்ந்து செயற்பட்டால், பிரதான ஆறு தமிழ்க் கட்சிகள் இயன்ற மட்டங்களில் ஒன்று சேர்ந்து செயற்படுகின்றன என்று அர்த்தமாகும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சில மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பில் நாமும் ஆலோசித்து வருகின்றோம். அதேபோல் கூட்டமைப்பும் தென்னிலங்கையில் சில மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பில் ஆலோசிக்கின்றது.

இந்தப் பரஸ்பரப் போட்டி, தமிழ் வாக்குகளை சிதைத்து விடக்கூடாது என்பதில் இரு சாராரும் கவனமாக இருக்கின்றோம்.

எனவே, எந்த அடிப்படையில் நாம் புரிந்துணர்வுடன் செயற்படுவது என நமது இரண்டு அணிகள் மத்தியில் பேச்சுகள் இடம்பெறலாம்.

இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி., எமது கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுடன் தொடர்புகொண்டுள்ளார். இன்னமும் சில தினங்களில் இந்தப் பேச்சுகள் இடம்பெறலாம்" - என்றார்.