மியன்மாரைப் போன்றுசர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்தவே முடியாது!

Report Print Rakesh in அரசியல்

“மியன்மாரைப் போல் இலங்கையில் மனித உரிமை மீறல்களோ அல்லது போர்க் குற்றங்களோ இடம்பெறவில்லை. எந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவே முடியாது.”

இவ்வாறு தெரிவித்தார் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தியுள்ளது.

மியன்மார் விவகாரத்தில் பின்பற்றப்பட்ட அணுகுமுறைகளை ஒத்த பொறிமுறைகளின் ஊடாக இலங்கையையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவது தொடர்பில் அந்தப் பேச்சில் ஆராயப்பட்டுள்ளது' என்று வெளியாகிய செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ரோம் சட்டத்தில் இலங்கை கையெழுத்திடவில்லை. அதேவேளை, இலங்கை விவகாரத்தை ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக்குக் கொண்டு செல்ல எமது நட்பு நாடுகள் ஒருபோதும் இணங்கமாட்டா.

அதுமட்டுமல்ல ஐ.நா. சபையும் இலங்கை விவகாரத்தை மோசமான வழிக்குக் கொண்டு செல்லாது. இலங்கை தொடர்பான ஐ.நாவின் 30/01, 40/01 தீர்மானங்களுக்கு கடந்த அரசு வழங்கியுள்ள இணை அனுசரணையிலிருந்துதான் நாம் விலகுகின்றோம்.

ஐ.நாவின் கொள்கைகளுடன் இணைந்து தொடர்ந்து பயணிப்போம். இதை இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் தெளிவாக எடுத்துரைக்கவுள்ளேன்” என கூறியுள்ளார்.