பொருளாதார பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் தீர்வு காண முடியவில்லை - விஜித ஹேரத்

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள போதிலும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு வழங்குவதாக கூறிய நிவாரணங்களை மக்களுக்கு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது. தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்து 100 நாட்கள் கடந்துள்ளது. தேர்தல் காலத்தில் எம்.சீ.சீ. உடன்படிக்கையை குப்பை கூடையில் வீசுவதாக கூறிய அரசாங்கம், தற்போது அதனை ஆராய குழுவை நியமித்தது.

அந்த குழு அறிக்கை வழங்கியுள்ளதுடன் எம்.சீ.சீ. உடன்படிக்கை சிறந்தது என அந்த குழு கூறியுள்ளது. இந்த அரசாங்கம் தேர்தல் மேடையில் ஒன்றை கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் வேறொன்றை செய்கின்றது. இலங்கை அரசாங்கம், அமெரிக்காவின் இணக்கத்துடன் எம்.சீ.சீ உடன்படிக்கையில் கையெழுத்திட நான்கு மாதங்களுக்கு ஒத்திவைத்தது.

பொதுத் தேர்தலின் பின்னர், அரசாங்கம் எம்.சீ.சீ. உடன்படிக்கையில் கையெழுத்திடும். தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த உடனேயே நாட்டின் காணிகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது. ஷெங்கீரிலா ஹோட்டலுக்கு அருகில் உள்ள மூன்று ஏக்கர் நிலத்தை சிங்கப்பூர் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது.

அதேபோல், அரசாங்கம் தேர்தல் நேரத்தில் ஓய்வுபெற்ற அங்கவீனமடைந்த படையினரின் பிரச்சினையை முக்கிய பிரச்சினையாக மாற்றியது. நாட்டின் பிரதான பிரச்சினையாக மாற்றியது. இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் அந்த படையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்க முடியாமல் போயுள்ளது. மீண்டும் அவர்கள் நடு வீதியில் உண்ணாவிரதம் இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் ஓய்வூதியம் பெறும் முன்னாள் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய உயர்வையும் அரசாங்கம் நிறுத்தியுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஓய்வூவு பெற்ற அரச ஊழியர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஓய்வூதியம் அதிகரிக்கப்படவிருந்தது எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.