அரசாங்கத்தின் பிரதானிகள் அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு நாடு திரும்புமாறு கோரிக்கை

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கத்தின் பிரதானிகளும் அவர்களின் குடும்பத்தினரும் அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு, ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் யோசனை சம்பந்தமாக அமெரிக்காவுக்கு கூடியளவு எதிர்ப்பை காட்டுமாறு மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

இராணுவ தளபதிக்கு பயண தடை விதித்துள்ள அமெரிக்காவுக்கு எதிராக இப்படியான நடவடிக்கை எடுக்கும் போது, ஜனாதிபதி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச ஆகியோர் முன்நோக்கி வர வேண்டும்.

அப்படி செய்யாமல், ஜெனிவா யோசனைக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விலகுவது அரசியல் நாடகம் மாத்திரமே. எதிர்வரும் பொதுத் தேர்தலில் மீண்டும் தேசப்பற்று ஆடையை அணிந்துக்கொள்வதே இதன் நோக்கம்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து விலகினாலும் இணை அனுசரணை வழங்கிய யோசனையில் இருந்து விலகவில்லை என்ற பின்னணியில், இலங்கை விலகியதால், யோசனை நீக்கப்படுமா என்பதில் தெளிவில்லை.

2009 ஆம் ஆண்ட போர் முடிவுக்கு வந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் - கீ - மூனை அழைத்து மகிந்த ராஜபக்ச கூட்டறிக்கையில் கையெழுத்திட்டார். இதனடிப்படையிலேயே அன்றைய ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்ததுடன் தருஷ்மன் அறிக்கை தயாரிக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு இணை அனுசரணை வழங்கிய யோசனையை மக்கள் விடுதலை முன்னணி எதிர்த்த போது, அந்த தீர்மானத்தை தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜீ.எல்.பீரிஸ் பாராட்டினார். இதனால் பதில் சொல்ல வேண்டியவர்களை அருகில் வைத்துக்கொண்டு ஏனைய தரப்பினர் மீது குற்றம் சுமத்துவதால், அரசாங்கம் கேலிக்கு உள்ளாகியுள்ளது எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.