கடைசி நேரத்தில் காலைவாரிய ரெலோ!நெடுந்தீவு பிரதேச சபையைகூட்டமைப்பு இழந்தது ஏன்?

Report Print Rakesh in அரசியல்

2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நெடுந்தீவு பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தாலும், தமிழரசுக் கட்சி, ரெலோ இடையிலான உள்வீட்டு மோதலால், அந்தச் சபையை ஈ.பி.டி.பி. நேற்றுக் கைப்பற்றியது.

நெடுந்தீவுப் பிரதேச சபையை தொடர்ந்தும் தக்க வைப்பதற்கு தமிழரசுக் கட்சி நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தது.

அந்த முயற்சிக்கு ஒத்துழைப்பதாகத் தெரிவித்த ரெலோ உறுப்பினர்கள் கடைசி நேரத்தில் காலை வாரியதால், சபை ஈ.பி.டி.பி. வசமானது என்று யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நெடுந்தீவுப் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சார்பில் இருந்து வந்த பிலிப்பு பற்றிக் றொஷான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில், கட்சித் தீர்மானத்தை மீறி கோட்டாபயவை ஆதரித்தமைக்காக பிரதேச உறுப்பினர் பதவியிலிருந்தும், தவிசாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, சபையில் எந்தவொரு கட்சியும் தனித்துப் பெரும்பான்மை அமைக்க முடியாத நிலைமை காணப்பட்டமையால், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் தவிசாளர் தெரிவுக்கான அமர்வு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சபையின் உப தவிசாளர் 2 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்திருந்த நிலையில் அவரது பதவியும் வெற்றிடமாகக் காணப்பட்டது. உபதவிசாளர் தெரிவுக்கு 5 தடவைகள் உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் அமர்வு இடம்பெற்றபோதும், சபையில் கோரம் இல்லாமையால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது (ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் 6 பேரும், சுயேச்சைக்குழு உறுப்பினர்கள் இருவரும் புறக்கணித்திருந்தனர்.)

இந்தநிலையில், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிறைஞ்சன் தலைமையில் நெடுந்தீவு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உபதவிசாளர் ஆகியோரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு நேற்று இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்ட றொஷானுக்குப் பதிலாக புதியவர் இன்னமும் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஏனைய 3 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் நேற்றைய அமர்வில் பங்கேற்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினர், சுயேச்சைக் குழுவின் இரண்டு உறுப்பினர்கள், ஈ.பி.டி.பி.யின் 6 உறுப்பினர்கள் நேற்றைய அமர்வில் பங்கேற்றனர்.

ஈ.பி.டி.பி. உறுப்பினர் நல்லதம்பி சசிக்குமார் தவிசாளராக முன்மொழியப்பட, சுயேச்சைக் குழுவின் கேதீஸ்வரநாதன் கணபதிப்பிள்ளை அதை வழிமொழிந்தார்.

இதையடுத்து எதிர்ப்பின்றி அவர் தலைவராகினார். உப தவிசாளராக ஈ.பி.டி.பி. உறுப்பினர் சந்தியாப்பிள்ளை தோமஸ் செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டார்.

பகிஷ்கரிப்பு ஏன்?

நெடுந்தீவு பிரதேச சபையில் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் ரெலோ உறுப்பினர்களான திருமதி தங்கேஸ்வரி ஜெயச்சந்திரன், சிந்தைக்குலநாயகி அனுசாந்தன், பரமேஸ்வரி இராசலிங்கம் ஆகிய மூவரும் அமர்வில் பங்கேற்காமைக்கான காரணத்தைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

13 உறுப்பினர்களைக் கொண்ட நெடுந்தீவுப் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பதற்கு 4 ஆசனங்களைக் கொண்ட எமது கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த ஒரு உறுப்பினர் எமக்கு ஆதரவு வழங்க முன்வந்தார்.

ஆட்சி அமைக்க மேலும் இரண்டு ஆசனங்கள் தேவைப்பட்ட நிலையில் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தெரிவாகிய இரு உறுப்பினர்கள் ஆதரவை வழங்க முன்வந்தனர். ஆட்சி அமைக்கப்பட்டது.

அதன் பின்னர் பல விடயங்களில் எதிர்க்கட்சியான ஈ.பி.டி.பியினருடன் இணைந்து சுயேச்சைக் குழுவின் இரு உறுப்பினர்களும் தீவிரமாக உள்ளும் புறமும் விமர்சித்தும், எதிர்த்தும், வந்ததோடு சபையைத் தொடர்ந்து இயங்க விடாமல் தடுத்தனர்.

ஆட்சி அமைத்து ஒரு மாத காலம் கடந்த நிலையில் எமது சபையின் உப தவிசாளரும் உயிரிழந்த நிலையில் அவரின் வெற்றிடத்துக்குப் புதிய உறுப்பினரை எமது கட்சியின் சார்பில் நியமித்த பின் உப தவிசாளர் தெரிவுக்கான தேர்தல் ஐந்து தடவைகள் நடத்தப்பட்டபோதும் ஐந்து தடவையும் ஈ.பி.டி.பியினருடன் இணைந்து சுயேச்சைக்குழு உறுப்பினர்களும் சபையில் இருந்து வெளிநடப்புச் செய்து உப தவிசாளர் தெரிவைத் தடுத்தும் வந்தனர்.

சபையை செயற்படுத்த முடியாத இக்கட்டான நிலைக்கும் தள்ளப்பட்டோம். இந்த நிலையில் நெடுந்தீவு பிரதேச சபையில் தவிசாளர் பதவியும் வெறிதாகியது.

சபையில் தொடர்ந்து ஆட்சி அமைக்க எமது கட்சிக்கு போதிய பெரும்பான்மையும் ஆதரவும் இல்லாத காரணத்தாலும் புதிய தவிசாளர் தெரிவு தொடர்பாக சுயேச்சைக் குழுவும் எமது கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோவின்) தலைமையுடன் எந்தவொரு கலந்துரையாடலையும் மேற்கொள்ளாத காரணத்தாலும் தவிசாளர் தெரிவுக் கூட்டத்துக்கு நாம் மூவரும் செல்வதில்லை என்று முடிவெடுத்தோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இணங்கிய ரெலோ

கடந்த 16ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மார்ட்டின் வீதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு நெடுந்தீவு பிரதேச சபையின் ரெலோ உறுப்பினர்கள் மூவரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன் சுயேச்சைக் குழு உறுப்பினர்கள் இருவரும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நெடுந்தீவு பிரதேச சபைத் தவிசாளர் பதவியை சுயேச்சைக் குழுவுக்கும், உப தவிசாளர் பதவியை ஐக்கிய தேசியக் கட்சிக்கும் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது. ரெலோ உறுப்பினர்களும் இணங்கியிருந்தனர்.

குழப்பிய தலைமை

ரெலோ தலைமை, தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகச் செயற்பட்டதாகத் தெரிவித்து நெடுந்தீவுப் பிரதேச சபை விவகாரத்தில் குழப்பம் விளைவித்தது.

நெடுந்தீவில் வெற்றிடமான உறுப்பினருக்குப் பதிலாக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் தம்முடன் கலந்தாலோசிக்காமல் தமிழரசுக் கட்சி செயற்பட்டது என்றும், தமது உறுப்பினர்களை அழைத்துக் கதைக்கும் போது தமக்கு எதனையும் தெரியப்படுத்தவில்லை என்றும் ரெலோ தலைமை கருத்து வெளியிட்டிருந்தது.

"தவிசாளர் தெரிவுக் கூட்டத்துக்கு ரெலோ உறுப்பினர்களை போக வேண்டாம் என்று நானே சொன்னேன்" என்று ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இதேவேளை, அந்தக் கட்சியின் முக்கிய உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், "தமிழரசுக் கட்சி எங்களை அழைத்து கதைக்காமல் விட்டது பிழை என்று எங்களுக்குள் கதைத்தோம்" என்று குறிப்பிட்டார்.

"பெரும்பான்மை இல்லாமையாலேயே உறுப்பினர்கள் நேற்றுச் செல்லவில்லை. சுயேச்சைக் குழு நேற்றைய கூட்டத்தைப் புறக்கணித்திருந்தால் கோரம் இல்லாமல் சபை ஒத்திவைக்கப்பட்டிருக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழரசுக்கும் ரெலோவுக்கும் ஒருங்கிணைப்பு இல்லை

இதேவேளை, சுயேச்சைக் குழு உறுப்பினர் க.கேதீஸ்வரநாதன் தெரிவித்ததாவது,

"சபை ஆரம்பத்தில் அமைக்கப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளித்திருந்தோம். ஓர் ஆண்டின் பின்னர் சபையின் தவிசாளர் பதவி எமக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சபையில் பல்வேறு முன்மொழிவுகளை நாம் முன்வைத்தபோதும் ஆளும் தரப்பு அதனை ஏற்றுச் செயற்படுத்தவில்லை.

இதன் காரணமாக உப தவிசாளர் தெரிவை நாம் புறக்கணித்திருந்தோம். நாம் ஈ.பி.டி.பியை எதிர்க்கவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை.

தமிழரசுக் கட்சித் தலைவர் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் எனக்குத் தவிசாளர் பதவி தரப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், ரெலோ உறுப்பினர்கள் நேற்றைய கூட்டத்துக்கு வரவில்லை.

எமது சபை தொடர்ந்தும் இழுபறிபட்டுக் கொண்டிருக்க முடியாது. எமது பிரதேசத்தின் அபிவிருத்திதான் தடைப்படுகின்றது.

எனவேதான் நாம் நேற்றுத் தெரிவில் பங்கேற்றோம். ஈ.பி.டி.பியின் எல்லாத் திட்டங்களையும் ஆதரிப்போம் என்றில்லை. நாங்கள் மக்கள் நலன் சார்ந்த திட்டத்துக்கு ஆதரவளிப்போம்.

தமிழரசுக் கட்சியினருக்கும் ரெலோ உறுப்பினர்களுக்கும் இடையில் உரிய ஒருங்கிணைப்பு இல்லை. இங்குள்ள குழப்பங்களுக்கு விந்தன் கனகரட்ணமும் காரணம்" என்றார்.

மிரட்டினார்களாம்

"கடந்த 16ஆம் திகதி தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ரெலோ உறுப்பினர்கள் மிரட்டப்பட்டே அழைக்கப்பட்டார்கள். ரெலோ உறுப்பினர்கள் என்றாலும் தமிழரசுக் கட்சி சார்பில்தான் போட்டியிட்டிருந்தீர்கள்.

எனவே, உங்களை பிரதேச சபை உறுப்பினர் பதவியில் நீக்குவோம் என்று மிரட்டித்தான் கூட்டத்துக்கு அழைத்திருந்தார்கள்" என்று ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசாமி தெரிவித்தார்.

மறுப்பு

யாரையும் மிரட்டி அழைக்கவில்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராகா தெரிவித்தார். "நெடுந்தீவு பிரதேச சபைக்குரிய பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனிடம் வழங்கப்பட்டுள்ளது .

வெற்றிடமாகவுள்ள உறுப்பினரின் இடத்துக்கு புதியவரை நியமித்து, வர்த்தமானியில் வெளியிட வேண்டியது அவரது (சிறிதரனின்) பொறுப்பு" என்றார்.

இது குறித்து சி.சிறிதரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "10 ஆண்டுகளாக அந்தப் பொறுப்பை வழங்குமாறு கட்சித் தலைமையிடம் நான் கேட்டு வருகின்றேன்.

கடந்த 16ஆம் திகதி ஒரு கூட்டம் நடந்தது. கடைசி நேரத்தில்தான் அதனையும் செய்தார்கள். பிரதேச சபை கைமாறியமை தொடர்பில் கட்சித் தலைமையிடம்தான் கேட்க வேண்டும்" என்றார்.

இப்படி அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.