சின்னம் தொடர்பில் விரைவில் தீர்வு! சஜித் தெரிவிப்பு

Report Print Rakesh in அரசியல்

நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் மார்ச் மாதம் 2ம் திகதி கைச்சாத்திடப்படும் என்று அதன் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கைக்கு முதலிடம்' என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு கூட்டணி செயற்படும்.சின்னம் தொடர்பான இறுதித் தீர்வு விரைவில் அறிவிக்கப்படும்.

அரசுக்குள் அரசு இன்று செயற்படுகின்றது. நாகரீகமான அரசியல் கலாசாரத்தை அறிமுகப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசு இன்று உரிமைக்காகப் போராடும் மக்கள் மத்தியில் எவ்வாறான நாகரீகத்தைப் பின்பற்றுகின்றது என்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

எவ்வாறான கொள்கையை அடிப்படையாகக் கொண்டு அரசின் இரு தலைவர்களும் (ஜனாதிபதியும்,பிரதமரும்) அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்கின்றார்கள் என்பது கேள்விக்குறியதாகும்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி ஜனநாயகத்துக்கு மாத்திரம் முன்னுரிமை கொடுக்கும்.

தேசிய பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு மற்றும்,தேசிய நல்லிணக்கம் ஆகிய மூன்று பிரதான அம்சங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டுள்ளன.

ஒன்றுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து பிறிதொன்றைத் துறக்க முடியாது. ஆனால், இன்று இந்த மூன்று அம்சங்களும் பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.