ஒரு லட்சம் தொழில் வாய்ப்புக்காக அனுராதபுரத்தில் 2 லட்சம் விண்ணப்ப படிவங்கள் விநியோகம்!

Report Print Steephen Steephen in அரசியல்

முழு இலங்கைக்கும் ஒரு லட்சம் தொழில் வாய்ப்புகளே வழங்கப்பட உள்ளதாகவும், சில நபர்கள் அனுராதபுரத்தில் தொழில் வாய்ப்புகளுக்கான இரண்டு லட்சம் விண்ணப்ப படிவங்களை விநியோகித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரான ராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வழங்குவதற்கு காணிகள் இல்லை, ஆனால், காணிகள் வழங்கப்படும் என பட்டியல் தயாரிக்கின்றனர்.

மேலும் சிலர் சங்கங்களுக்கு நாற்காலிகளை வழங்குகின்றனர். அடுத்த அரசாங்கத்தில் தான் இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் என சிலர் கூறுகின்றனர். இன்னும் சிலர் தாம் குறித்த நபரின் பிரதிநிதியென கூறுகின்றனர்.

இவை அனைத்தையும் செய்ய நாங்கள் 7 பேர் அனுராதபுரத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு செல்ல தேவையான வாக்கு வங்கியை உருவாக்க வேண்டும். இதற்கு பின்னர் கோட்டாபய ராஜபக்சவின் நிலைப்பாடுகளுடன் இருக்கும் நபர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முடியும்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிக்கு வந்து விட்டார் என்பதால், நாட்டை உடனடியாக மாற்ற அவர் மாயாஜால வித்தகர் அல்ல.

நாம் ஜனாதிபதிக்கு உதவ வேண்டும். அவர் நினைக்கும் மாற்றத்தை ஏற்படுத்த வலுவான நாடாளுமன்றத்தை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.