ஐ.தே.கட்சிக்கு பூஜ்ஜியம் சின்னம் பொருத்தமானது! மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு பொருத்தமான அரசியல் சின்னம் பூஜ்ஜியம் எனவும், அந்த கட்சிக்கு எதிர்காலத்தில் கிடைக்கும் முடிவு பூஜ்ஜியம் என்பதால், அந்த சின்னம் உண்மையில் பொருந்தும் எனவும் ராஜாங்க அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் சில அரசியல் தலைவர் பொதுத் தேர்தலில் அந்த கட்சி 90 ஆசனங்களுக்கு மேல் பெறும் என்று பேசும் முன்னர், கட்சியின் சின்னம் தொடர்பான பிரச்சினையை தீர்த்துக் கொள்வது முக்கியமானது.

நாட்டுக்கு துரோகமான ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் 301 யோசனையில் இருந்து அரசாங்கம் விலக நடவடிக்கை எடுத்தமை மிகப் பெரிய வெற்றி.

கடந்த அரசாங்கம் சர்வதேச ரீதியில் நாட்டை சிக்க வைப்பத்றகாக இணை அனுசரணை வழங்கியதை தோற்கடிக்க நடவடிக்கை எடுத்தமை மிகப் பெரிய வெற்றி.

நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் மகிந்த ராஜபக்ச அரசாங்கம், நாட்டில் உள்ள உணவு களஞ்சியங்கள் சகலவற்றிலும் வருடம் முழுவதற்கும் தேவையான உணவை சேமித்து வைத்திருந்தது.

கடந்த அரசாங்கம் இந்த கொள்கையை தலைகீழாக மாற்றியதுடன் களஞ்சியங்களை வெறுமையாக்கி, நாட்டை தற்போதைய அரசாங்கத்திடம் கையளித்தது எனவும் மகிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.