இலங்கை பல்லினங்களை கொண்ட நாடு: தினேஷ் ஜெனிவாவில் கூறியதை கேலி செய்ய வேண்டாம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இலங்கை பல்லின, பலமொழி, பல மதங்கள் மற்றும் பல கலாச்சாரங்களை கொண்ட நாடு என கூறியது சமூக வலைத்தளங்களில் விவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இது சம்பந்தமாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் உவிந்து குருக்குலசூரிய,

“தலைவர் தினேஷ் இலங்கையை பல்லின, பல மொழி, பல மதங்கள் மற்றும் பல கலாச்சாரங்களை கொண்ட நாடு எனக் கூறியது பற்றி கேலி செய்ய வேண்டாம்.

அது சிறந்த விடயம். இது சிங்கள பௌத்த நாடு என அடி குரலில் கத்தும் தினேஷ் போன்ற இலங்கையில் உள்ளவர்கள் ஜெனிவாவுக்கு சென்று இப்படி கூறுவதன் மூலம் இலங்கை அரசின் நிலைப்பாடும் அதுதான் என்பதே இதற்கு காரணம்.

இறையாண்மை குறித்து இலங்கையில் பெரிதாக பேசினாலும், ஐக்கிய நாடுகளின் இணக்கப்பாடுகளில் கைச்சாத்திட்டுள்ள நாடு, இறையாண்மையில் ஒரு பகுதியை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு எழுதி கொடுத்துள்ளது என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

தினேஷ் கூறியதை வேறு ஒரு அரசாங்கம் கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும்? என்ன நடந்திருக்கும் என்பது வேறு விடயம், ஏற்றுக்கொண்டது முக்கியமானது” எனக் கூறியுள்ளார்.

இலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல பல இனங்களையும், மதங்களையும் கலாச்சாரங்களையும் கொண்ட நாடு என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.

மங்கள சமரவீரவின் இந்த கருத்தை அன்றைய எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பௌத்த பிக்குகள், சிங்கள தேசிய அமைப்புகள் கடுமையாக விமர்சித்திருந்தன.

ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பௌத்த மக்கள் சஜித் பிரேமதாசவுக்கு அதிகளவில் வாக்களிக்காதமைக்கும் இதுவே காரணம் எனவும் கூறப்பட்டது.