உலக நாடுகளுடன் பகைத்துக் கொண்டு இலங்கை முன்னேற முடியாது: றிசாட் எம்.பி

Report Print Thileepan Thileepan in அரசியல்

உலக நாடுகளுடன் பகைத்துக் கொண்டு இந்த நாடு முன்னோக்கி நகர முடியாது என முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் ஐ.நா தீர்மானத்தில் இருந்து அரசாங்கம் விலகுவது தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் என்ற வகையில் தாங்கள் மட்டும் ஒரு நாடாக நினைத்து வாழ முடியாது. இந்த அரசாங்கமோ அல்லது நாடோ ஏனைய நாடுகளுடன் சேர்ந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

சுதந்திரத்திற்கு பின்னர் பாரிய யுத்தத்திற்கு முகம் கொடுத்து அழிவுகளை சந்தித்து இருக்கின்றோம். அந்த அழிவுகள் எமக்கு ஒரு பாடமாக விளங்கி, கடந்த காலத்தில் பேரினவாதிகள் விட்ட தவறை இன்றைய தலைவர்களும், அரசியல் கட்சிகளும் ஒரு பாடமாக கொண்டு செயற்பட வேண்டும்.

சிறுபான்மை சமூகத்தினுடைய உள்ளங்களை உடைத்து, அவர்களுக்கு ஆத்திரத்தை ஊட்டி அசிங்கமான முறையில் செயற்படுகின்ற போது அது இந்த நாட்டிற்கு நல்லதல்ல. சுதந்திரம் பெற்ற போது செல்வந்த நாடான யப்பானுக்கு அடுத்த இடத்தில் இருந்த இந்த நாட்டின் யுத்தத்தினால் பொருளாதாரம் அதளபாதாளத்திற்குள் சென்றுள்ளது.

இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளுடன் பகைத்துக் கொண்டு இந்த நாடு முன்னோக்கி நகர முடியாது. பெற்றோல் வெளிநாடுகளில் இருந்து வருகிறது.

அதேபோல் எமது ஏற்றுமதிப் பொருட்கள் அமெரிக்காவும், ஐரோப்பாவுக்கும் செல்கிறது. 5 பில்லியன் டொலர் பெறுமதியிலான ஆடைகள் அங்கு அனுப்பப்படுகிறது. இலங்கைக்கு எதிரான பிரேரணையை கொண்டு வருவதில் ஐரோப்பாவும், அமெரிக்காவுமே முன்னுன்று உழைத்தன. அவ்வாறான நாடுகளுடன் நேருக்கு நேர் முட்டி முரண்பட்டுக் கொண்டிருப்பது இந்த நாட்டிற்கு தான் ஆபத்தானது.

பெரும்பான்மை மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக பேரினவாத சிந்தனையோடு இந்த அரசாங்கத்தில் உள்ள ஒரு சிலர் இனவாதத்தை, மதவாதத்தை விதைப்பதுடன் உலக நாடுகளையும் பகைத்துக் கொள்ளும் வகையில் செயற்படுகின்றனர்.

அவர்கள் இதனை திருத்திக் கொள்ளாவிட்டால் அதனால் ஏற்படும் பாதிப்பு நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே அரசாங்கம் ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக தமது கருத்தை சர்வதேசத்தில் சொல்ல வேண்டுமே தவிர, வாக்குகளைப் பெறுவதற்காக மட்டும் பேசுபவர்களாக இருக்க கூடாது எனத் தெரிவித்தார்.

Latest Offers

loading...