சர்வதேச வலைக்குள் இருந்து விடுதலை பெற்றது இலங்கை - சமல் ராஜபக்ச பெருமிதம்

Report Print Rakesh in அரசியல்

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கு ரணில் அரசு இணை அனுசரணை வழங்கியிருந்தமையால் சர்வதேச சமூகத்தின் வலைக்குள் இலங்கை சிக்கியிருந்ததாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்த தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து கோட்டாபய அரசு தற்போது விலகியுள்ளமையால் நாட்டுக்கு விடுதலை கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியுள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் கூறுகையில்,

எவ்வித ஆதாரங்களும் இன்றி இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களையும், போர்க் குற்றச்சாட்டுகளையும் சில நாடுகள் ஜெனீவாவில் முன்வைத்திருந்தன.

அதன்பிரகாரம் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன. இதற்கு ரணில் அரசானது அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி இணை அனுசரணை வழங்கியிருந்தது.

இதனால் எமது நாடு சர்வதேச சமூகத்தின் வலைக்குள் சிக்கித் தவித்தது. எனினும், அந்தப் பொறிக்குள் இருந்து தற்போது நாம் தப்பிவிட்டோம்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையை நாம் வெறுக்கவும் இல்லை. பகைக்கவும் இல்லை. ஆனால், இலங்கை மீதான தேவையற்ற குற்றச்சாட்டுக்களையும், சர்வதேசத்தின் அநாவசிய தலையீட்டையும் மட்டுமே நாம் எதிர்க்கின்றோம்.

வன்னியில் இறுதிப் போர் தமிழ் மக்களுக்கு எதிராக நடக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுக்கவே எமது இராணுவத்தினர் போரிட்டனர்.

அதில் அவர்கள் வெற்றியும் கண்டனர். தமிழ் மக்கள் இன்று நிம்மதியாக வாழ்கின்றார்கள். இதை ஐ.நாவும் சர்வதேச நாடுகளும் புரிந்து கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers

loading...