இலங்கைக்கு சர்வதேச அழுத்தம் வரலாம் : அரசாங்கத்தை எச்சரித்த ருவன்

Report Print Gokulan Gokulan in அரசியல்

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பொறுப்புகூறல் தொடர்பிலான தீர்மானத்திலிருந்து கோட்டா-மஹிந்த அரசாங்கம் விலகியிருப்பதால் சர்வதேசத்திலிருந்து பல்வேறு வகையிலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜெனீவா விவகாரத்தில் அரசாங்கம் மீள் ஆய்வை செய்ய வேண்டும் என்று கூறுகின்றேன். எதிர்காலத்தில் எந்தவகையான அழுத்தங்கள் எமது நாடு மீது பிரயோகிக்கப்படும் என்ற பிரச்சினையும் உள்ளது. எவ்வாறாயினும் எமது நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பட்டோம்.

எனினும் சர்வதேச நாடுகளுடன் மீண்டும் நல்ல தொடர்புகளை ஏற்படுத்தி செயற்படவே எதிர்பார்த்தோம். எதிர்காலத்தில் எவ்வகையான அழுத்தம் வருமோ தெரியாது. ஆகவே தற்போதைய அரசாங்கம் மீளாய்வு செய்து சரியான முடிவை எடுக்கும் என நினைக்கின்றேன்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியில் அவசியமான மாற்றங்கள் எதிர்காலத்தில் நடக்கும் என நம்புகின்றேன். தற்போது பொதுத் தேர்தலொன்று நெருங்கிவருகின்ற காரணத்தினால் அந்த மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. ஏனென்றால் அனைவரும் தேர்தலை இலக்கு வைத்து செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைக்கப்படுவது அவசியமாகின்றது. எதிர்காலத்தில் அந்த மாற்றத்தை செய்யமுடியும் என்று நம்புகின்றேன். பலமான எதிர்கட்சியாக இந்த பொதுத் தேர்தலை எதிர்கொள்கின்றோம். இந்த நாடு எதிர்பார்த்த நல்ல விடயங்கள் இந்த அரசாங்கத்தினால் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.

எதிர்கட்சியாக மக்களின் பிரச்சினைகளுக்காக முன்நின்று தேர்தலை வெற்றிகொள்ளவே எதிர்பார்க்கின்றோம். ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று சொற்ப மாதங்களில் பொதுத் தேர்தலும் நடத்தப்படுவதால் முழுமையான வெற்றியிலக்கை அடைவது கடினம்தான்.

இருப்பினும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து நாடாளுமன்ற அதிகாரத்தை எம்மால் கைப்பற்றிக்கொள்ள முடியும் என்று நம்புகின்றேன்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்சியின் சின்னம் குறித்து இன்னும் பேச்சு நடத்தி வருகின்றோம். கடந்த முறை செயற்குழுக் கூட்டத்தில் யானைச் சின்னமா அல்லது அன்னச் சின்னமா என்ற கலந்தாலோசனை நடத்தப்பட்டது.

சின்னம் பிரச்சினையில்லை. யானைச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்பது எனது சொந்த கருத்தாக உள்ளது. எனினும் அன்னச் சின்னத்தில் போட்டியிட்டு பொதுக் கூட்டணியாக முன்நகர்வதற்கும் எனக்கு ஆட்சேபனையில்லை.

சின்னம் குறித்த நெருக்கடியானது நாளை அல்லது எதிர்வரும் திங்கட்கிழமையில் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கின்றேன். எந்த சின்னமாக இருந்தாலும் கூட்டணியாகவே இந்தப் பொதுத் தேர்தலை நாங்கள் எதிர்கொள்வோம். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 100 நாட்களைக் கடந்த போதிலும் சுவர்களுக்கு நிறப்பூச்சை தீட்டியதே தவிர வேறொரு அர்த்தபுஷ்டியான செயற்பாடுகளையும் செய்யவில்லை.

அவற்றை மூடி மறைப்பதற்காக நல்லாட்சி அரசாங்கம் மீது சேறுபூசுகின்றது. பொருளாதாரத்தை சிறப்பாக கையாண்டு நிவாரணங்களை அரசாங்கம் வழங்கும் என்றே மக்கள் எதிர்பார்த்து வாக்களித்தார்கள்.

உண்மையிலேயே மக்களுக்கு சேவை ஏற்படுத்தப்படவில்லை என்பதோடு பொருளாதாரத்திற்கும் விருத்தி ஏற்படுத்தப்படவில்லை. ஆகவே இவற்றை கருத்திற்கொண்டு நாட்டு மக்கள் பொதுத் தேர்தலில் இன்னும் 4,5 வருடங்கள் இவர்கள் கைகளுக்கு நாட்டை ஒப்படைப்பதா, இல்லையா என்கிற முடிவை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.