ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை ஏற்க இலங்கை மறுப்பு!

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை ஏற்க இலங்கை மறுத்துள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்கமுடியாது என்று பேரவையில் பதிலளித்து உரையாற்றிய இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பேரவையின் 43வது அமர்வில் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எவ்வித சாட்சியங்களும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே இலங்கை தொடர்பான தமது மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செய்ல் பெச்சலெட் நல்லிணக்கத்துக்காக இலங்கையின் புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான ஆணைக்குழு யோசனையை ஏற்கமுடியாது என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட யோசனையில் புதிய மாற்று முயற்சி ஒன்றை இலங்கையின் புதிய அரசாங்கம் கொண்டு வந்துள்ளமை குறித்து தாம் வருத்தமடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்க முயற்சிகளில் இருந்தும் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைக்காப்பு விடயங்களில் இருந்து பின்வாங்குவது ஆபத்தான நடவடிக்கையாகும்.

இலங்கை அரசு அதன் மக்களுக்காக குறிப்பாக சிறுபான்மை சமூகங்களின் தேவைகளுக்காக செயற்பட வேண்டும்

அந்த வகையில் கடந்த சில வருடங்களாக இலங்கையில் முன்னேற்ற நிலை நிலவி வந்தது.

இந்தநிலையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகப்பணிகம் உறுதிப்படுத்தி அதற்கு அரசியல் ஆதரவை வழங்க வேண்டும் என்று தாம் அரசாங்கத்தை கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

19ஆம் திருத்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்திரப்படுத்துவது ஜனநாயக கட்டமைப்புக்கான தூண்களாக இருக்கும்.

சிவில் சமூகத்துக்கு வழிவிடப்படவேண்டும். அத்துடன் ஊடகத்துறை பாதுகாக்கப்படவேண்டும். அண்மைக்காலமாக இந்த அமைப்புக்கள் பாதுகாப்பு பிரிவினரால் கண்காணிக்கப்படுவது மனித உரிமைக்காப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவது குறித்து தாம் கவலையடைவதாக பெச்சலட் குறிப்பிட்டுள்ளார்.

வெறுக்கத்தக்க பேச்சுக்கள் சிறுபான்மையினரான தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரான புறக்கணிப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கம் கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. பாதுகாப்பு பிரிவுகள் மீளமைக்கப்படவில்லை.

தொடர்ந்தும் நீதித்துறைக்கு தடைகள் உள்ளன. உள்ளக ஆணைக்குழுக்கள் மூலம் பொறுப்புக்கூறல் விடயங்களில் வெற்றியை காணமுடியவில்லை. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளது. மனித உரிமைமீறல் வன்முறைகள் மீண்டும் இடம்பெறாது என்பதற்கு உறுதிப்பாடு ஏற்படவில்லை.

எனவே ஒரு ஆணைக்குழுவை அமைப்பதற்கு தாம் உடன்பாடில்லை என்றும் மிச்செய்ல் பெச்சலட் தெரிவித்துள்ளார்.