சிவில் செயற்பாட்டில் இராணுவம்: ஐக்கிய தேசியக் கட்சி அதிருப்தி!

Report Print Gokulan Gokulan in அரசியல்

கோட்டாபய-மஹிந்த தலைமையிலான இலங்கையின் புதிய அரசாங்கத்தின் பலவீனமான முகாமைத்துவமானது சிவில் செயற்பாடுகளில் படையினரை ஈடுபடுத்தியதன் ஊடாக புலப்படுகின்றது என்றுநாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கண்டி – திகன, பலகொல்ல பிரதேசத்திலுள்ள பௌத்த மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் ஐக்கிய கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சர்வதேச சமூகத்துடன் நல்லாட்சி அரசாங்கம் சிறந்த தொடர்வை பேணிவந்த போதிலும், புதிய அரசாங்கமானது அந்த உறவுகளை சேதப்படுத்தும் வகையில் செயற்படுகிறது.

இலங்கை அரசாங்கம் தற்போது பொதுப் போக்குவரத்து நிர்வகிப்பு செயற்பாடுகளில் பொலிஸாருடன் இணைந்து இராணுவச் சிப்பாய்களையும் ஈடுபடுத்தி வருகின்றது.

அரச நிறுவனங்கள், திணைக்களங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல்களை நியமித்து வருகின்ற மறுபக்கத்தில், சிவில் சேவைகளிலும் படையினரை ஈடுபடுத்தி வருவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.

நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இந்த புதிய அரசாங்கத்திற்கும் இடையிலான வித்தியாசம் இதுவாகும். நாங்கள் சர்வதேசத்துடன் பிரச்சினைகள் இருக்கின்றபோது அவற்றை சிறப்பாக முகாமை செய்துகொண்டோம்.அவர்களுடன் பேச்சு நடத்தினோம்.

தீர்மானத்திலிருந்து விலகுவதானது மிகவும் இலகுவான விடயம். உடனடியாக விலக முடியும். ஆனால் விலகுவதல்ல, அந்த இடத்தில் நின்று அவர்களுடன் பேச்சு நடத்தி தவறான தீர்மான யோசனைகள் இருந்தால் அவற்றை நீக்கியிருந்தால் பிரச்சினையில்லை.

மாறாக முழு தீர்மானத்திலிருந்தும் விலக எடுத்த முடிவானது ஐக்கிய நாடுகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையாகும். சர்வதேச சமூகத்துடன் நாங்கள் மனக்கசப்பை ஏற்படுத்திவிட்டால் அதனால் ஏற்படுகின்ற பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது புரியும்.

இதேவேளை, உண்மையிலேயே கட்சிக்குள் முரண்பாடுகள் கிடையாது. ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவானது சஜித் தலைமையிலான புதிய கூட்டணியை ஏற்றுக்கொண்டது.

அதேபோல அன்னச் சின்னத்தில் போட்டியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனை சட்டபூர்வமாக்கும் பணிகளே இப்போது உள்ளன. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சில மாதங்களே ஆகின்றன. ஒரேயொரு பணியை மட்டுமே செய்தது.

அதாவது பாணின் விலையை 05 ரூபாவால் குறைத்துள்ளது. ஆனால் எமது நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டது, அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது, சமுர்த்தி கொடுப்பனது அதிகரிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டது.

அதேபோல 45 உறுப்பினர்களை வைத்துக்கொண்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசியலமைப்புத் திருத்தத்தையும் மேற்கொண்டோம். இதுதான் முகாமைத்துவம். இவர்களுக்கு முகாமை செய்ய முடியாது. நோக்கமும் கிடையாது.

அதனால்தான் இன்று இராணுவத்தினரும் வீதிகளில் பொலிஸாருடன் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இராணுவத்தினரை நாங்கள் மதிக்கின்றோம். ஆனாலும் இன்று படையினரை சிவில் செயற்பாடுகிளல் ஈடுபடுத்துவது குறித்த விமர்சனம் எழுந்துள்ளது. எதிர்வரும் நாட்களில் நடக்கும் தேர்தலில் மக்கள் சரியான பதிலை அளிப்பார்கள் என்று நம்புகிறோம், என்று கூறியுள்ளார்.