ஐ. நா. ஆணையரின் கருத்துகள் ஒருதலைப்பட்சமானவை!

Report Print Rakesh in அரசியல்

இலங்கை தொடர்பில் ஐ. நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தவறானவை, ஒருதலைப்பட்சமானவை என இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்க்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கையின் அரசமைப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரானது என்பதை எதிர்க்கட்சியாகத் செயற்படும் காலத்தில் இருந்து தெரிவித்திருந்தோம்.

நாம் ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டுக்கு எதிரான தீர்மானங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் இருந்து விலகிக்கொள்வோம் என்று பெரும்பாண்மை மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம். அதன் பிரகாரமே ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகினோம்.

அரசு தீர்மானத்திலிருந்து விலகியதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் முற்றிலும் தவறானவை ஒருதலைப்பட்சமானவை.

கடந்த வருடம் 'ஏப்ரல் 21' குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து சந்தேகத்தின் பிரகாரம் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பிலும், நிறைவடைந்த தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாதமை குறித்தும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் தவறானதாகும்.

இவ்விரு விடயங்களும் இலங்கையின் உள்ளக விவகாரங்களாகும்.

நாட்டின் இறையாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களுக்கு ஒருபோதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுமதி வழங்கமாட்டார். இதுவே நாடாளுமன்றத் தேர்தலில் எமக்குப் பாரிய வெற்றியைப் பெற்றுக்கொடுக்கும்" - என்றார்.