ராஜபக்சக்களைத் தோற்கடிக்கவே சஜித்தின் கூட்டணியுடன் இணைவு! ஹக்கீம் தெரிவிப்பு

Report Print Rakesh in அரசியல்

இன, மத, மொழி அடிப்படைவாதத்தைத் தூண்டி நாட்டு மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் ராஜபக்ச அணியினரைத் தோற்கடிக்கேவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான 'ஐக்கிய மக்கள் சக்தி' பொதுக் கூட்டணியில் இணைந்துகொண்டுள்ளோம்."

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாஸ - ரவூப் ஹக்கீம் ஆகியோர் கூட்டாகப் பங்குகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

"நான் உள்ளிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான 'ஐக்கிய மக்கள் சக்தி' பொதுக் கூட்டணியில் இணைந்துகொண்டுள்ளோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.

எங்களுக்கு சின்னமோ, கட்சியின் பெயரோ முக்கியம் அல்ல. எமது இனத்துக்கு எதிராகச் செயற்படுவர்களை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிப்பதே எமது நோக்கம். அதற்கு ஏதுவான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

சஜித்தின் கரங்களைப் பலப்படுத்துவோம். ஓரணியில் கூட்டணியாக நின்று வெற்றிவாகை சூடுவோம். அதற்கான ஆணையை எமது மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது" - என்றார்.