இலங்கையை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தச் செய்யுங்கள்!கூட்டாக ஐ.நா. ஆணையாளரிடம் வேண்டுகோள்

Report Print Rakesh in அரசியல்

சர்வதேச சட்டங்களின் பிரகாரம் இலங்கையைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தச் செய்யுங்கள் என்றும், இலங்கை குறித்து சர்வதேச பொறிமுறையொன்றை ஏற்படுத்துமாறும் 8 சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளரைக் கேட்டுக் கொண்டுள்ளது.

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட 8 சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஐ.நா. மனித உரிமைகள் மிச்செல் பச்லெட் அம்மையாருக்குக் கூட்டாக எழுதியுள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தில் குறிப்பிடத்தக்க பின்னோக்கி நகர்வுகள் இடம்பெறுகின்றன என்பதற்கான அறிகுறிகள் குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆற்றியுள்ள உரை இதனை உறுதி செய்வதுபோல் காணப்படுகின்றது.

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை மாற்றும் இலங்கை அரசின் முடிவு நீதித்துறையினதும், ஏனைய ஆணைக்குழுக்களினதும் சுதந்திரத்தை பாதிக்கும். இலங்கை அரசு காணாமல்போனோர் குறித்த அலுவலகச் சட்டம் குறித்து மீள்பரிசீலனை செய்கின்றது.

இதேபோன்று சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் காணமல்போனவர்கள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சமீபத்தில் வெளியிட்டுள்ள ஈவிரக்கமற்ற கருத்து காணாமல்போனவர்களின் குடும்பத்தினருக்கு மேலும் துயரத்தை அளித்துள்ளது.

சர்வதேச சட்டங்களை மீறினர் என இலங்கை தொடர்பான அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டமை மனித உரிமைகள் ஆணையாளரின் கரிசனையை நாங்களும் பகிர்ந்து கொள்கின்றோம்.

2019 நவம்பர் முதல் அரசசார்பற்ற அமைப்புகளைக் கண்காணிக்கும் பொறுப்பு பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் அவர்களின் கண்காணிப்பு ஆபத்து அதிகரித்துள்ளது. பல மனித உரிமைகள் அமைப்புகளுக்கும், ஊடகங்களுக்கும் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அச்சுறுத்தும் விஜயங்களை மேற்கொண்டுள்ளனர். ஊடகவியலாளர்களுக்கு எதிரான மரண அச்சுறுத்தல்கள் மீண்டும் ஆரம்பித்துள்ளன.

இலங்கையில் மீண்டும் அச்ச சூழல் தோன்றியுள்ளது. குறிப்பாக உண்மை, நீதி, பொறுப்புக்கூறலுக்காகக் குரல் கொடுப்பவர்களுக்கு அச்ச சூழ்நிலை திரும்பியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட தெளிவான கட்டமைப்புகளை ஏற்று நடக்கப்போவதில்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளதால் இலங்கையை சர்வதேச சட்டங்களின் கீழான அதன் கடப்பாடுகளின் அடிப்படையில் பொறுப்புறக்கூறலுக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.