பொதுத் தேர்தலை இலக்கு வைத்து நிதி ஒதுக்கீடு இல்லாமல் சப்ரிகம இன்று ஆரம்பம்

Report Print Rakesh in அரசியல்

நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து நாடு முழுவதும் அவசர அவசரமாக 'சப்ரிகம’ திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகள் எவையும் உரிய வகையில் மேற்கொள்ளப்படாத நிலையிலேயே இந்தத் திட்டம் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ரணில் அரசு, கிராமிய உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டத் துக்கு (ஆர்.ஐ.டி.பி.) ஒதுக்கிய நிதியிலிருந்து சிறு தொகை நிதியே, இவ்வாறு மாற்றப்பட்டு இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கோட்டாபய அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் சப்ரிகம திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு கிராமத்துக்கும் 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் அபிவிருத்தித் திட்டங்கள் இனங்காணப்பட்டிருந்தன.

அவை நிதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இந்தத் திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

நாளைமறுதினம் திங்கட்கிழமை நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், இந்தத் திட்டங்களுக்கான அடிக்கல் நடுகைகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதமர் ஊடாக முன்னெடுக்க முடியாது. அதற்காகவே அவசர அவசரமாக இந்தத் திட்டங்கள் இன்று ஆரம்பிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு கிராமத்துக்கும் 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டுக்குரிய வேலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இந்தத் திட்டத்தின் மொத்த நிதியின் 20 சதவீதமே தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும், ரணில் அரசு கிராமிய உட்கட்டுமான அபிவிருத்திக்கு கணக்கறிக்கை ஊடாக ஒதுக்கிய நிதியையே, இந்தத் திட்டத்துக்கு கோட்டாபய அரசு ஒதுக்கியுள்ளது.

சப்ரிகம திட்டம் ஆரம்பிக்கப்பட்டாலும், நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஆட்சிக்கு வரும் அரசு வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக எஞ்சிய நிதியை ஒதுக்கவேண்டும். அவ்வாறு ஒதுக்கப்படாவிட்டால் இந்தத் திட்டத்தை முன்னெடுக்க முடியாது இடைநடுவில் நிறுத்தவேண்டி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.