தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் பதுக்கி வைத்துள்ள பணம் தேர்தலின் போதே வெளிவரும்! கருணா குற்றச்சாட்டு

Report Print Varunan in அரசியல்

30 வருட போராட்டம் 12 வருட நாடாளுமன்ற அனுபவம் இவற்றோடு தான் அம்பாறை மாவட்டத்தில் களம் இறங்கியுள்ளேன். அதன் மூலம் அம்பாறை மாவட்ட மக்களின் பாதுகாவலனாக இருந்து அவர்களை காப்பாற்றுவேன் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டத்தில் தற்போது மாற்றம் தேவைப்படுகின்றது. அந்த மாற்றத்தை பெற்றுக்கொடுக்கும் ஆற்றல் என்னிடம் உள்ளது.

அவ்வாறு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி மக்களின் பாதுகாவலான இருக்க வேண்டும் என்பதற்காகவே அம்பாறை மாவட்டத்தில் களம் இறங்கியுள்ளேன்.

அதற்காகவே கிழக்கு தமிழர் ஒன்றியம் எனும் பெயரில் கிழக்கில் உள்ள அனைத்து புத்திஜீவிகளையும் உள்வாங்கி கூட்டணி ஒன்றினை உருவாக்கி தனி தமிழ் கட்சியாக போட்டியிடவுள்ளோம்.

இக்கட்சி மூலம் கிழக்கு மாகாணத்தில் பெரும் வெற்றியை பெறுவதற்கும் எமது கட்சி தயாராகவுள்ளதுடன், மக்களும் எம்மை வரவேற்பதுடன் மாற்றம் காண அவர்களும் தயாராகிவிட்டனர்.

கடந்த நாடாளுமன்றத்தில் இருந்த எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது அதிகாரத்தை முறையாக பயன்படுத்தவில்லை. கடந்த 5 வருட காலமும் எமது மக்களை குழிதோண்டி புதைத்த காலமாகிவிட்டது.

அது போல் கடந்த ஆட்சியில் இருந்த ரணிலும், மைத்திரியும் நாட்டையே பாதாளத்தில் தள்ளி விட்டு சென்றுள்ளனர்.

இதன் காரணமாவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்தி புதிய அரசாங்கத்தை கொண்டு வந்துள்ளனர். இதேநேரம் சாய்ந்தமருது நகர சபை தரமுயர்த்தலை தடுத்தவன் நானே.

அதற்கு காரணம் உள்ளது. சாய்ந்த மருதை மாநகர சபையாகவும் கொடுங்கள். அதைப்பற்றி எமக்கு கவலையில்லை. ஏனெனில் அது தனியான முஸ்லிம்களின் பிரதேசம்.

ஆனால் கல்முனையை தரமுயர்த்தாமல் அதை வழங்கக்கூடாது என்பதே எனது வாதம். இதன் அடிப்படையில் மொத்தமாக 6 பிரதேச செயலகங்கள் மற்றும் சபைகள் தேர்தலின் பின்னர் உயர்த்தப்படும். கல்முனையை அரசியலாக்க விரும்பவில்லை.

தேர்தல்களின் போது அதிகமான பணத்தை செலவு செய்யும் கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு.அவர்கள் பதுக்கி வைத்துள்ள பணத்தை அப்போது தான் செலவு செய்வார்கள்.

இம்முறை தமிழ்தேசிய கூட்டமைப்பு உடைந்துவிடும்.இதேநேரம் வடமாகாணத்திலும் நாம் வேறு வடிவில் போட்டியிடவுள்ளோம்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஆலையடிவேம்பு இணைப்பாளர் நிவராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு தமிழர் ஒன்றிய செயலாளர் வி.குணாளன் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.