காணாமல்போனோர் அலுவலகப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்! இலங்கை ஜெனீவாவில் உறுதி

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செய்ல் பெச்சலட்டை சந்தித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது அமர்வில் பங்கேற்க சென்றுள்ள நிலையிலேயே தினேஸ் குணவர்த்தன மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்துள்ளார்.

இதன்போது ஐக்கிய நாடுகளின் 40-1 யோசனையின் இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகிக் கொண்டமைக்கான காரணங்களை அவர் விளக்கியுள்ளார்.

முன்னாள் வெளியுறவு அமைச்சரும் கூட இந்த யோசனைகளில் சில திருத்தங்களை கோரிய போதும் அது இடம்பெறவில்லை என்று தினேஸ் குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இணை அனுசரணையில் இருந்து விலகுவது மட்டுமல்லாமல் நாட்டின் அரசியலமைப்புக்கு உட்பட்டு உள்ளக வரையறையின் கீழ் நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வர உள்ளக ஆணைக்குழு அமைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நிலையான அபிவிருத்திக்காக ஐக்கிய நாடுகளின் உதவிகளை தொடர்ந்தும் பெற்றுக் கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற சட்டத்தின்கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகப் பணிகள் தொடர்ந்தும் அரசாங்க கட்டமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்படும் என்றும் தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்துரைத்த ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் ஆணையாளர் பெச்சலெட், இலங்கை இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொண்டமை குறித்து தமது கவலையை வெளியிட்டுள்ளார்.

அதேநேரம் ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரகத்துடன் ஒத்துழைக்கவும் காணாமல்போனோர் தொடர்பான அலுவலகப் பணிகளை முன்னெடுக்கவும் இலங்கை வழங்கியுள்ள உறுதிமொழிகளை அவர் வரவேற்றுள்ளார்.