கோட்டாபய ராஜபக்ச தலைமையின் கீழ் உள்ள சிறுபான்மை அரசாங்கத்தை பெரும்பான்மை அரசாங்கமாக மாற்ற பொதுத் தேர்தலில் நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள சிக்கல்கள் காரணமாக முன்னாள் பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் அதிகார போட்டி ஏற்பட்டதுடன் நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்ல முடியாமல் போனது.
நாட்டு மக்களின் அதிஷ்டம் தற்போதைய ஜனாதிபதியும், பிரதமரும் சகோதர்கள் என்பதால், நல்ல புரிந்துணர்வுடன் அரசியலமைப்புச் சட்ட போராட்டங்களின்றி நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல முடிந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் எமக்கு சிறுபான்மை பலமே இருப்பதால், நாட்டின் எதிர்கால நடவடிக்கைகளை செயற்படுத்த முடியாதுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் கடனை செலுத்தவும் அரசாங்கத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்லவும் குறை நிரப்பு பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி அதனை எதிர்த்ததால், திரும்ப பெற நேரிட்டது.
இதனால், தற்போதைய அரசாங்கத்தின் நோக்கங்களை முன்நோக்கி கொண்டு செல்ல தடையேற்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்றத்தை கலைக்கக் கூடிய மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறப்பான மக்கள் ஆணையை கோட்டாபய ராஜபக்சவுக்கு பெற்றுக்கொடுத்து அவரது நோக்கங்களை முன்னெடுத்துச் செல்ல உதவுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் நிமல் லங்சா குறிப்பிட்டுள்ளார்.