ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய சக்தி ஆகியவற்றுக்கிடையில் முறுகல் நிலை நீடிக்குமா? அல்லது தீர்வு எட்டப்படுமா? என்ற கேள்விக்கு இன்றிரவு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய சக்தி கட்சிக்கான தேர்தல் சின்னமாக அன்னம் இருக்குமா? அல்லது யானை ஒதுக்கப்படுமா? என்பதும் இன்றிரவு இடம்பெறவுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே தெரியவரும்.
ஐக்கிய தேசிய சக்தியின் யாப்புக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு ஒப்புதல் வழங்கியமையை ஒரு சக்கரம் இல்லாத வாகனம் என்று ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்
தேர்தலுக்கான சின்னம் ஒன்று இல்லாமையை அவர் சக்கரம் இல்லாத வாகனத்துக்கு ஒப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ரவி கருணாநாயக்கவின் கட்சியின் சின்னமான அன்னத்தை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதற்கு முழுமை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதா? என்பதை தெரிந்துக்கொள்ள முடியும்.
தமது அன்னம் சின்னத்தை சஜித் பிரேமதாசவின் கட்சிக்கு வழங்கினால் அதன் செயலாளர் பதவி தமது கட்சிக்கு வழங்கப்படவேண்டும் என்று ரவி கருணாநாயக்க கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதும் இன்னும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
இது உண்மையாக இருந்தால் ஐக்கிய தேசியக்கட்சியின் யானை சின்னத்தில் சஜித் பிரேமதாச தலைமையிலான கட்சி போட்டியிடுமாறு ரணில் விக்கிரமசிங்க கோரக்கூடும்.
ஏற்கனவே இந்த கருத்தை ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரத்தில் சஜித் பிரேமதாசவிடம் தெரிவித்துள்ளார்
எனினும் இதனை சஜித் பிரேமதாச ஏற்பாரா என்பதற்கும் உறுதியான பதிலில்லை. எனவே சின்னம் என்ற பிரச்சினை ரணில், சஜித் அரசியல் உறவில் தொடர்ந்தும் முறுகலை தோற்றுவிக்குமா? இல்லையா என்பதை இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் தெரிந்துக்கொள்ள முடியும்.