இனவாத கட்சியை தோற்கடிக்க சஜித் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்போம்: இராதாகிருஷ்ணன்

Report Print Thirumal Thirumal in அரசியல்
21Shares

இனவாதத்தைக்கக்கி வாக்குவேட்டையாட முயற்சிக்கும் கட்சிக்கு வாக்களிப்பதைவிட, தலைநிமிர்ந்து வாழ்வதற்காக சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்பதே சிறந்தது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் விசேட கூட்டம் இன்று ஹட்டனில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

"2015 ஆம் ஆண்டிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி உதயமானது. தேர்தலை அடிப்படையாகக்கொண்டு அல்லாமல், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கிலேயே நாம் இணைந்து பயணித்தோம். மேற்படி கொள்கையின் அடிப்படையிலேயே இன்றும் எமது பயணம் தொடர்கின்றது.

அடுத்த பொதுத்தேர்தலிலும் நாம் இணைந்தே போட்டியிடுவோம். அந்த நற்செய்தியை தெரிவிப்பதற்காகவே தொழிலாளர் தேசிய சங்கத்தின் கூட்டத்தில் பங்கேற்றேன். கிடப்பில் போடப்பட்டிருந்த 4 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை திகாம்பரம் மலையகத்தில் செயற்படுத்தினார். அதுமட்டுமல்ல மேலும் பல வீட்டுத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இது விடயத்தில் அவரின் செயற்பாடு பாராட்டத்தக்கது.

அதேபோல் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்து நானும் பல சேவைகளை செய்துள்ளேன். மலையகத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்கு இன்று தெரிவாகும் மாணவர்களின் விகிதத்தை ஒப்பிட்டு பார்த்தால் இது தெரியவரும். குறிப்பாக ஹட்டனில் இருந்து மட்டும் 250 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அத்துடன், வெளி மாவட்டங்களிலிருந்து வந்து நுவரெலியாவில் பரீட்சை எழுதுவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

இதனால் இங்கிருந்து வைத்தியர்கள், பொறியியலாளர்கள் உருவாகும் நிலை உதயமாகியுள்ளது. மருத்துவ பீடத்துக்கு செல்வதற்கு நுவரெலியா மாவட்டத்துக்கு 25 கோட்டாக்கள் வழங்கப்படும். பின்தங்கிய பிரதேசம் என்ற அடிப்படையில் 2 வழங்கப்படும். ஆகமொதத்தத்தில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து 27 பேர் வைத்தியபீடம் செல்லலாம்.

அதேவேளை, பிரதேச சபை அதிகரிப்பு, செயலகங்கள் உருவாக்கம், மலையக அபிவிருத்தி அதிகாரசபை என கடந்த நான்கரை வருடங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியால் புரட்சிகரமான திட்டங்கள் மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆயிரம் ரூபா வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. மார்ச் முதலாம் திகதி பிறந்த நிலையிலும் அந்தத் தொகை கிடைக்கவில்லை. விரைவில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என கூறுகின்றார்கள். எது எப்படியிருந்தபோதும் ஏப்ரல் 10 என்பது தேர்தலுக்கு முன்வரும் திகதியாகும். அப்போதாவது கிடைக்குமா என்று பார்ப்போம்.

இனவாதம் பேசி வாக்கு கேட்பதற்கு முயற்சிக்கின்றனர். ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் மக்கள் சிவாஜிலிங்கத்துக்கோ, ஹிஸ்புல்லாவுக்கோ வாக்களிக்கவில்லை.

சிங்கள, பௌத்தரான சஜித்துக்கே வாக்களித்தனர். இது புரியாமல் மாறுபட்ட கோணத்தில் வாக்குகளுக்காக கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தமிழிழ் தேசிய கீதம் பாட தடைவிதிக்கப்பட்ட நிலையில், ஜெனிவாவிலும் தமிழர் விவகாரம் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, சலுகைகளுக்கு அடிபணிந்து வாக்களிப்பதைவிட, தலைநிமிர்ந்து வாழவே வாக்களிக்கவேண்டும். அதற்கான ஆதரவையே தமிழ் முற்போக்கு கூட்டணி கோருகின்றது என்றார்.