எதிர்வரும் பொதுத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று தனது கொள்கையை முன்னெடுத்து செல்ல போவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் பொலன்னறுவை மாவட்ட தேர்தல் அலுவலகம் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கதுருவெல பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது.
அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,
நான் எப்போதும் தேர்தலில் தோல்வியடைந்ததில்லை. இதனால், எதிர்வரும் பொதுத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று எனது கொள்கை மற்றும் நோக்கத்தை முன்நோக்கி கொண்டு செல்வேன் என கூறியுள்ளார்.
பொலன்னறுவை மாவட்டத்தை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் தனக்கு எதிராக சுமத்தும் குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து வெளியிட்ட மைத்திரிபால சிறிசேன,
பொலன்னறுவையில் கடந்த சில மாதங்களாக என்றுமில்லாத வகையில் அரசாங்கத்தின் வன்முறை பரவியுள்ளது.
இந்த வன்முறை மிக விரைவில் முடிவுக்கு வரும். அநீதிகளுக்கு உள்ளான சகல அரச அதிகாரிகளுக்கான பொறுப்பை தான் ஏற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.