கோட்டாபய ஆட்சியில் மக்களுக்கு விமோசனம் என கூறுகின்றார் நஜீப் ஏ மஜீத்

Report Print Rakesh in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சியில் மக்களுக்கு விமோசனம் கிடையாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பொய்ப் பிரச்சாரத்தை எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு கூறி வருவதாக முன்னாள் பிரதி அமைச்சரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஜீப் ஏ மஜீத் தெரிவித்துள்ளார்.

உண்மையில் கோட்டாபயவின் ஆட்சியில் மக்களுக்கு விமோசனம் கிடைக்கின்றது. அவரின் வருகையின் பின்னரே இந்த நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிண்ணியாவில் ஸ்ரீங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

நாட்டு மக்களின் தேவைகளை உணர்ந்த ஒரு தலைவனாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விளங்குகிறார்.

கடந்த முப்பது வருட காலப் போரை வெற்றி கொண்ட தலைவர்களாக ஜனாதிபதியும், அவரின் சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் விளங்குகின்றனர்.

இவ்வாறானவர்கள் இணைந்து நாட்டை சுபீட்சமிக்க செழிப்பான பாதைக்கு அபிவிருத்தியடைந்த நாடாக கொண்டு செல்வார்கள் என்பதில் எவ்வித ஐயப்பாடும் எமக்குக் கிடையாது.

முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து நிம்மதியாக வாழ்கின்ற சூழ்நிலை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச நல்ல பல திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றார். வேலைவாய்ப்பில் பட்டதாரிகளுக்கான நியமனங்கள், ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் கல்வியில் பாரிய புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல பல திட்டங்களை ஜனாதிபதி நடைமுறைப்படுத்தி வருகிறார்.

நாங்கள் சிறு சிறு கட்சிகளாக இருந்தாலும் கூட பெரும்பான்மை கட்சிகளுடன் இணைந்து பயணிப்பதனால் நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கலாம்.

1994, 2000, 2004, 2012 ஆகிய ஆண்டுகளில் உங்கள் வாக்குகள் மூலம் நீங்கள் எனக்கான அதிகாரங்களைத் தந்தீர்கள்.

இம்முறையும் திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு அதிகப்படியான விருப்பு வாக்குகளை நாடாளுமன்ற தேர்தலில் நாம் பெற்றுக்கொடுப்போம் என தெரிவித்துள்ளார்.