மலையக குரங்கும், கொக்கும் கூட்டணி வேட்பாளர் யார் என தீர்மானிக்க முடியாது: நாடாளுமன்ற உறுப்பினர் திலகர்

Report Print Gokulan Gokulan in அரசியல்
93Shares

மலையக குரங்கும், கொக்கும் கூட்டணி வேட்பாளர் யார் என தீர்மானிக்க முடியாது எமக்கு கட்சி கட்டமைப்பு உள்ளது.உயர்பீடம் உரிய நேரத்தில் முடிவை அறிவிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் திலகர் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று நடைபெற்ற தொழிலாளர் தேசிய சங்கம், முன்னணியின் கிளைத் தலைவர்களுக்கான கூட்டத்திலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தொழிலாளர் தேசிய சங்கம் 55 வயதைக் கடந்தது. மலையக மக்கள் முன்னணி 30 வயதைக்கடந்தது. ஜனநாயக மக்கள் முன்னணியும் வரலாறுகளைக் கொண்டது. எமது கட்சிகளுக்கு கட்டமைப்பு உள்ளது. கூட்டணிக்கும் கட்டமைப்பு உள்ளது. உரிய நேரத்தில் அவை உரிய முடிவை எடுக்கும்.

இணையத்தில் உலாவும் மலையக குரங்கு, கொக்கு, பாம்பு, நாகம், குருவி, கழுகு, கருடன் எனும் பிராணிகள் எமது கூட்டணியின் சின்னத்தையோ வேட்பாளர்களையோ தீர்மானிக்க முடியாது. கூட்டணியின் ஒற்றுமையையும் பலத்தையும் நிரூபிப்பதே இன்றைய கூட்டத்தின் செய்தி.

இன்று மார்ச் முதலாம் திகதி என்றதும் பலத்த எதிர்பார்ப்பு மலையகத்தில் ஏற்பட்டது. தையில் பிறக்கும் வழி மார்ச்சில் பிறக்கும் என்பதே அந்த எதிர்பார்ப்பு. ஆனாலும் ஆயிரம் ரூபா அறிவிப்பில் மார்ச் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நுவரெலியா மாவட்டத்திற்கான புதிய பிரதேச செயலகங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

நாங்கள் நாடாளுமன்றில் பிரேரணை நிறைவேற்றி, அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்து, வர்த்தமானி அறிவித்தலும் வெளிவந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுடன் வந்த ஆட்சி மாற்றத்தால் இன்று முடங்கிப் போயுள்ளது.

ஒரு கட்டடத்தில் அதனை ஆரம்பிக்க கூட அமைச்சர்களுக்கு வக்கில்லை. இப்போது தேர்தல் காலம் நெருங்கி வந்தால் புதுப்புது முகங்கள் களத்திற்கு வந்து வாக்கு கேட்ப்பார்கள். புதியவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என நான் சொல்ல மாட்டேன் .

ஏனெனினில் நானும் புதிதாக வந்தபோது மக்கள் வாக்களித்ததனால்தான் அந்த மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியுமாக இருந்தது. நான் புதியவனாக வந்தாலும் எனது கட்சிக்கு ஐம்பது வயதாகிய நிலையிலேயே அந்த கட்சியின் வேட்பாளராக வாக்கு கேட்டு வந்தேன்.

மலையக மக்கள் முன்னணியும் முப்பது வயதைக் கடக்கிறது இதுபோன்ற கட்சிகளுக்கு மலையக நகரங்களில் காரியாலயங்கள் உள்ளன. அங்கு உத்தியோகத்தர்கள், அமைப்பாளர்கள், இணைப்பாளர்கள், மகளிர் அணியினர், இளைஞர் அணியினர் என ஒரு கட்டமைப்பு இருக்கும்.

மக்கள் அவர்கள் ஊடாக தாம் தெரிவு செய்த மக்கள் பிரதிநிதிகளை அணுகலாம். இந்த கட்டமைப்புகள் ஏதுமின்றி தேர்தல் வந்ததும் திடீரென ஞானம் பிறந்து மக்களிடம் வாக்கு கேட்க வருபவர்களிடம் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

அதேபோல இப்போது இணையத்தில் மலையக மிருகங்கள் ஊடக போர்வையில் உலாவுகின்றன. எங்களுக்கு மரபு சார்ந்த ஊடகங்கள் மீது மதிப்பு உண்டு. இணையத்தில் உலாவும் மலையக குரங்கு, கொக்கு, பாம்பு, நாகம், குருவி, கழுகு, கருடன் எனும் பிராணிகள் எமது கூட்டணியின் சின்னத்தையோ வேட்பாளர்களையோ தீர்மானிக்க முடியாது.

அதனை பேராளரில் இருந்து உயர்பீடம் வரையான கட்சி கட்டமைப்பு தீர்மானிக்கும். நாங்கள் இப்போது பேசிக் கொண்டிருக்கும்போது எமது முன்னாள் உட்கார்ந்து இருப்போர் தொண்டர்கள் அல்ல. அவர்கள் அனைவரையும் தலைவர்களும் தலைவிகளும் ஆகும். உங்களை நாங்கள் அப்படியே விளிக்கிறாம்.

நீங்கள் தேர்தலில் போட்டியிட எங்களது அனுமதி அளிக்கும் கூட்டமே இது. அதற்கு வலுசேர்க்க மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் செயலாளரும் வருகை தந்து எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஒற்றுமையையும் பலத்தையும் நிரூபிக்கவே.

அதனை குழப்பவும் எமது சின்னம் வேட்பாளர்கள் யார் மலையகம் எனும் அடைமொழி போட்டுக் கொண்ட பிராணிகளால் முடியாது. தேர்தல் வரும்போது எமது கட்சியினதும் கூட்டணியினதும் உயர்பீடம் உரிய முடிவை அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.