கூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசியலில் இருந்து வெளியேற வேண்டும்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

Report Print Theesan in அரசியல்
90Shares

தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரன் மற்றும் சேனாதிராஜா ஆகியோர் அரசியலிலிருந்து வெளியேற வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்றுடன் 1111 நாட்களை எட்டியுள்ளது.

இதனை முன்னிட்டு அவர்களால் இன்று மேற்கொள்ளப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின் போதே அவர்கள் மேற்குறிப்பிட்ட கருத்தை முன்வைத்துள்ளனர்.

அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சம்பந்தன், சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் அரசியலிலிருந்து வெளியேறி இளையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

போர்க்குற்றம் ஒரு சர்வதேச குற்றம், எனவே இது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் அல்லது சர்வதேச தீர்ப்பாயத்தினால் விசாரிக்கப்பட வேண்டும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை வடக்கு-கிழக்குக்கு வரவேண்டும். அவர்கள் நேரில் வந்து எங்கள் துயரங்களை பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

இதன் போது எங்கள் பிள்ளைகள் எமக்கு வேண்டும் ,வெளிநாடு தலையிட்டு எமக்குரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும், உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே, சர்வதேச விசாரணை வேண்டும் போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்ததுடன் . அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளையும் தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.