இலங்கை தொடர்பில் சர்வதேச தீர்ப்பாயம் நிறுவப்படவேண்டும்!

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் பாதுகாப்பு பிரிவுகள் மனித உரிமையாளர்கள் மற்றும் ஊடவியலாளர்கள் மீது கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக நியூயோர்க்கை தலைமையமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டு நவம்பர் மாதம் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் கருத்து சுதந்திரமும் இல்லாமல் செய்யப்பட்டு வருகிறது.

நாட்டின் பல பகுதிகளில் பணியாற்றும் 15 மனித உரிமை நடவடிக்கையாளர்கள், தம்மீது பாதுகாப்பு பிரிவுகளின் கண்காணிப்புகள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமை நடவடிக்கையாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் முன்கொண்டு செல்லவுள்ள விடயங்கள் குறித்தும் பாதுகாப்பு பிரிவினர் கேட்டறிகின்றனர்.

இது எதிர்காலத்தில் ஜெனீவாவுக்கு எதிர்காலத்தில் செல்லமுடியாத நிலையை தோற்றுவிக்கும் என்று அச்சப்படுவதாக மனித உரிமை நடவடிக்கையாளர்களை கோடிட்டு மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தபின்னர் மீண்டும் அச்சநிலை நிறுவப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசிய பணிப்பாளர் மீனாட்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச தமது பாதுகாப்பு அமைச்சின் கீழ் காவல்துறை, அரச சார்பற்ற நிறுவன செயலகம் என்பவற்றை கொண்டு வந்துள்ளார்.

புலனாய்வு சேவையின் தலைவராக முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை நியமித்துள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இராணுவத்தின் கமல் குணரட்னவை பாதுகாப்பு செயலாளராக நியமித்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த மூன்று மாதங்களில் அடையாளம் தெரியாத சிலர் ஊடகவியலாளர்களை தாக்கியுள்ளனர். அவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வெள்ளை வான் கலாசாரம் மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக மனித உரிமை நடவடிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் மீனாட்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.

எனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இந்த விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கி இலங்கையின் கடந்தகால குற்றங்களை விசாரணை செய்ய சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றை நிறுவவேண்டும் என்றும் மீனாட்சி கங்குலி கோரிக்கை விடுத்துள்ளார்.