இந்த ஆட்சியில் இரட்டிப்புச் சுதந்திரம் என்றார்களே அது எங்கே? கேள்வியெழுப்பும் ஸ்ரீநேசன்

Report Print Navoj in அரசியல்

கொலையாளிகளுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு தமிழ் அரசியல் கைதிகளுக்கு இல்லை. இது தானா இந்த ஆட்சியின் இரட்டிப்புச் சுதந்திரம் என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற பொதுத்தேர்தல் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் அரங்கில் பல்வேறு கருத்துக்களைச் சொல்லுகின்றவர்களை விட கொப்பளிக்கின்றவர்கள் அதிகம் காணப்படுகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சார்ந்து நின்று விலாசத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் தற்போது வெளியில் நின்று கொண்டு விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த ஆட்சியில் இரட்டிப்புச் சுதந்திரம் கிடைக்கும் என்று சொல்லியிருந்தார்கள். இந்த இரட்டிப்பான சுதந்திரம் என்பதில் தமிழில் தேசியகீதம் பாடுவது அடிப்படைவாதத்தைத் தூண்டுகின்ற செயற்பாடு என்று சொல்லி அது தடுக்கப்பட்டமையும் அடங்குமோ தெரியாது.

தமிழர் திருநாளான பொங்கல் விழா தேசிய விழாவாக கொண்டாடப்பட்ட நிலைமை மறுக்கப்பட்டு அது வீண் செலவை ஏற்படுத்துகின்ற விழா என்று சொல்லப்பட்டதும் அடங்குமோ தெரியாது.

தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற கருத்துச் சொல்லப்பட்டது. ஆனால் 34 புலனாய்வாளர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இதுவும் சொல்லப்பட்ட இரட்டிப்புச் சுதந்திரத்தில் அடங்குமோ தெரியாது.

மிருசுவில்லில் எட்டுப்பேரின் மிடறுகளும் அறுக்கப்பட்டு கொலை செய்து புதைக்கப்பட்ட செயலைச் செய்தமை தொடர்பில் தண்டனை வழங்கப்பட்ட கைதி ஒருவர் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டமையும் இரட்டிப்பு சுதந்திரத்தில் அடங்குமோ தெரியாது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மண்ணுக்குள் தேடிப்பாருங்கள் என்று சொல்வதும் இரட்டிப்புச் சுதந்திரத்தில் அடங்குமோ தெரியாது.

இவ்வாறிருக்கையில் தங்களுக்கு ஒரு பதவி அந்தஸ்து கிடைத்துவிட்டால் வாயில் வருகின்றவற்றையெல்லாம் கொப்பளித்துக் கொண்டிருக்கின்ற நிலைப்பாடு என்பது மறந்து போன சிந்தனையாகவே இருக்க வேண்டும்.

இங்கு பூச்சாண்டிகளைக் காட்டிக் கொண்டிருக்கின்ற பல புல்லுருவிகள் பல வார்த்தைகளை இறைக்கலாம், கொப்பளிக்கலாம், அவர்களுக்குச் சிலவேளை பக்கவாத்தியம் பாடுகின்றவர்களும் இருக்கலாம்.

பதவிக்காகப் பறிபோனவர்கள், பதவிக்காக விற்பனைப் பொருட்களாக மாறிப் போனவர்கள் எல்லாம் இப்போது ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டு பல்வேறுபட்ட கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களிடம் நாம் கேட்பது ஒன்றே ஒன்று தான் நீங்கள் சொன்ன இரட்டிப்புச் சுதந்திரம் எங்கே? தற்போது மாறிப் போனவர்கள் அவர்களது கைகளை சும்மா வைத்திருக்கின்றார்கள்.

இன்னும் ஸ்திரமான ஆட்சி வந்தால் இவர்கள் தமிழர்களுக்கு எதிரான எத்தனை பிரேரணைகளுக்குக்கைகளை உயர்த்துவார்கள் என்பது பற்றி சிந்திக்க வேண்டும். 19ஆவது திருத்தத்தை நீக்கி சர்வாதிகாரத்துடன் கூடிய ஒரு இறுக்கமான ஆட்சியைக் கொண்டுவர இருக்கின்றார்கள்.

அவ்வாறு அந்த புதிய சட்டங்களுக்கு தங்கள் கைகளை உயர்த்துவதற்கும் நம்மில் இருந்து போனவர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு அற்பசொற்ப சலுகைகளுக்காகச் செல்பவர்கள் எமது மக்களுக்கான இரட்டிப்பான சுதந்திரத்தைப் பெற்றுத் தந்துவிடுவார்களா என்பதை எமது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.