குமார வெல்கமவின் புதிய கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான குமார வெல்கம தூய பண்டாரநாயக்க கொள்கைகளை கொண்ட புதிய கட்சியை நாளைய தினம் ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற பெயரில் அவர் இந்த கட்சியை ஆரம்பிக்க உள்ளார். கட்சியை ஆரம்பிக்கும் நிகழ்வு குமார வெல்கம தலைமையில் நாளைய தினம் முற்பகல் 10 மணிக்கு பிட்டகோட்டேயில் உள்ள சோலிஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மகிந்த ராஜபக்ச அணியில் இருந்து வந்த குமார வெல்கம, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதை எதிர்த்து அந்த அணியில் இருந்து வெளியேறினார். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோட்டாபய ராஜபக்சவை ஆதரிப்பதை கடுமையாக எதிர்த்து வந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து பொதுத் தேர்தலில் போட்டியிடும் நிலையில், குமார வெல்கம இந்த புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளார்.

குமார வெல்கம தலைமையிலான புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.