மட்டக்களப்பில் 17 ஆண்களுடன் ஒரு பெண் வேட்பாளர்

Report Print Jeslin Jeslin in அரசியல்

நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியின் சார்பாக போட்டியிடுவதற்காக 17 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பித்த 17 பேரில் ஒரே ஒரு பெண் வேட்பாளராக முனைக்காட்டையைச் சேர்ந்த சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் மட்டக்களப்பு, பட்டிருப்புத் தொகுதியிலிருந்து கூடுதலான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கட்சித்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்குடா தொகுதியிலிருந்து இருவர் விண்ணப்பித்துள்ளனர். தமிழரசுக்கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் கல்குடாத் தொகுதியை பிரதிநிதித்துப்படுத்திய போதிலும் தேர்தலில் போட்டியிட அவர் விண்ணப்பிக்கவில்லை.

விண்ணப்பதாரர்களுக்கான சந்திப்பு இன்று காலை 10மணியளவில் கட்சியின் மட்டக்களப்பு காரியாலயத்தில் நடைபெற்றுள்ளது.

கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பொன். செல்வராசா தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் கட்சியின் செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விண்ணப்பித்த 17 பேரிலிருந்து 3 பேர் மாத்திரமே தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மேலும், மட்டக்களப்பின் வரலாற்றின் 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள முதலாவது பெண் வேட்பாளராக மங்களேஸ்வரி காணப்படுகின்றார்.

இதற்கு முன்னர் மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தி 2004ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.