வளைந்து கொடுக்கும் நிலைப்பாட்டில் ரணில்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மிகவும் பொருத்தமான சின்னம் யானை சின்னம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுப்படுவதை தடுக்க வேறு சின்னத்தில் போட்டியிட இணங்குவதாகவும் ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சஜித் தரப்புக்கு அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்றிரவு நடைபெற்ற விசேட செயற்குழுக் கூட்டத்தின் பின்னர், ரணில் விக்ரமசிங்க, சஜித் தரப்பின் முக்கியஸ்தர் ஒருவரை தொடர்புக்கொண்டு இதனை அறிவித்துள்ளார்.

செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இரண்டு தரப்புக்கும் இடையில் கையெழுத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை உடனடியாக தயார் செய்யுமாறு ரணில் கூறியுள்ளார்.

புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடும் யோசனையை முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம, ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்திருந்தார்.

அதேவேளை ரணில் விக்ரமசிங்க வளைந்து கொடுக்கும் நிலைப்பாட்டுக்கு வந்துள்ள போதிலும் அவரை சுற்றி இருக்கும் சிலர் கூட்டணி ஏற்படுத்துவதற்கு எதிராக செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அடிப்படையை பாதுகாத்து, பொதுத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் நேற்றிரவு நடந்த ஊடக சந்திப்பில் கூறியிருந்தார்.

தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டால், தான் கட்சியில் இருந்து விலகி விடுவதாகவும் பொதுத் தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும் காரியவசம் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே ரணில் விக்ரமசிங்க செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் நேற்றிரவு துபாய் புறப்பட்டுச் சென்றார்.