ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து மிகப் பெரிய தாக்குதல்களை தொடுக்க திட்டத்தை உருவாக்கி வருவதாக தெரியவருகிறது.
மைத்திரிபால சிறிசேனவுக்கு பொதுஜன பெரமுனவின் கீழ் வேட்புமனுவை வழங்காது, பொலன்நறுவையில் தனித்து போட்டியிட செய்வதே இந்த தாக்குதலின் நோக்கம் என கூறப்படுகிறது.
மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் கூறியிருந்த பருந்து கதை மற்றும் பிறரது கூடுகளில் முட்டையிடும் கதை என்பன இதற்கு காரணம் என பேசப்படுகிறது.
இதனடிப்படையில் நேற்றைய தினம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, தமது கூட்டில் முட்டையிட சிறிசேனவுக்கு தான் இடமளிக்க போவதில்லை எனவும் சிறிசேன புதிதாக கூடு ஒன்றை கட்டி அதில் முட்டையிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அதேவேளை விமல் வீரவங்சவும் நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக மிகப் பெரிய விமர்சனத்தை முன்வைத்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு சிறிசேனவும் பொறுப்புக் கூற வேண்டும் என வீரவங்ச கூறியிருந்தார்.