100 நாட்கள் தொடர்பில் திருப்தியில்லை - ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

திட்டங்கள் இல்லாமல் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றியதன் காரணமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கும் தனக்கு கிடைத்த மக்கள் ஆணையை செயற்படுத்துவதில் தடையேற்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் காரணமாக அரச நிர்வாகத்தை முன்னெடுப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

செய்தி பிரிவுகளின் பிரதானிளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமையை மாற்றுவதற்கு இம்முறை பொதுத் தேர்தலில் எனக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியம். பொதுத் தேர்தலில் நான் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் தேர்தல் மேடைக்கு வருவேன்.

மக்கள் ஆணையை செயற்படுத்த எனது கொள்கை முன்னெடுத்துச் செல்லக் கூடிய அணியை கொண்ட அரசாங்கத்தை அமைப்பது அவசியம்.

அரசாங்கம் நியமனங்களை வழங்கிய பட்டதாரிகளுக்காக பயிற்சிகளை தொடர்ந்தும் வழங்க எதிர்பார்த்துள்ளது. இதனால், இது சம்பந்ததாக தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

இந்த பயிற்சிகளை நிறுத்த தேர்தல் ஆணைக்குழு எடுத்த தீர்மானம் அடிப்படையற்றது. இந்த பயிற்சிகளுடன் அரசியலுக்கு தொடர்பில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் கடந்த 100 நாட்கள் சம்பந்தமாக ஜனாதிபதியிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், இந்த காலப் பகுதியில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தனது தரத்திற்கு அமைய அந்த காலப் பகுதி சம்பந்தமாக முழுமையாக திருப்தியடைய முடியாது எனவும் கூறியுள்ளார்.