பிரபாகரனால் பெற்றுத்தர முடியாத உரிமைகளை எவராலும் பெற்றுத்தர முடியாது: கிருஷ்ணபிள்ளை

Report Print Rusath in அரசியல்

அடிமையாக வாழ்கின்ற சூழலை நாங்களாகவே உருவாக்கி விட்டோம். மற்ற இனத்தவர்களை வாழ வைத்தவர்களாகத்தான் வாழ்கின்றோம் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்தார்.

இன்று களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த காலத்தில் மட்டக்களப்பு படுவாங்கரையில் ஒரு தொழிற்பேட்டை அமைப்பதற்கு முன்னின்று செயற்பட்டேன். அதனை தடுத்து நிறுத்தியவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் என் சக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்தான் என்பதையும் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தற்போதைய கிழக்கு மாகாண ஆளுனரை அண்மையில் சந்தித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 தொழில் பேட்டைகள் அமைக்கப்படல் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்.

நல்ல சிந்தனையுள்ள சேவையாளர்களை எதிர்வருகின்ற தேர்தல்களில் தமிழ் மக்கள் தெரிவு செய்யவேண்டும். கடந்த கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவியை ஏனையவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்தது தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான்.

அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாண சபையில் 2 அமைச்சர்கள் இருந்தும் ஒன்றும் செய்யவில்லை.

தலைவர் பிரபாகரனால் பெற்றுத்தர முடியாத உரிமைகளை எவராலும் பெற்றுத்தர முடியாது என்பதற்கு உதாரணமாக சம்பந்தன் ஐயா அவர்கள் கால எல்லைகளைக் கூறிக் கூறி எதையும் தமிழ் மக்களுக்குப் பெற்றுத்தரவில்லை.

ஆகக் குறைந்தது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரைக்கூட பெற்றுத்தரவில்லை.

இவ்வாறானவர்களுக்குப் பின்னால் மக்கள் இனிமேலும் செல்லவேண்டுமா என்பதையும் தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

எனவே நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடுத்து, ஏனைய கிழக்குவாழ் மக்கள் அனைவரும், ஒன்றிணைந்து வெற்றி பெற்று நாட்டில் எந்த அரசாங்கம் ஆட்சியமைக்கின்றதோ அந்த அரசாங்கத்துடன் பேரம்பேசி இணைந்து எமது தமிழ் மக்களை மேலும் நல்வாழ்வுக்கு இட்டுச் செல்ல வேண்டும். இதற்கு தமிழ் மக்கள் அனைவரும், முன்வரவேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.