இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களாக 100க்கும் மேற்பட்ட இளைஞர்,யுவதிகள், நிபுணர்கள் நிறுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்த போதிலும் கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய 95 வீதமான முன்னாள் அரசியல்வாதிகளுக்கு வேட்பு மனுக்கள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வியத் மக அமைப்பில் அங்கம் வகிக்கும் 100க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் மாத்திரமல்லாது திறமையான இளைஞர், யுவதிகள் பெருமளவில் தேர்தலில் நிறுத்தப்பட உள்ளதாக இதற்கு முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தன.
எனினும் பொதுஜன பெரமுனவின் புதிய வேட்பாளர்களாக கலாநிதி நாலக கொடஹேவா, பேராசிரியர் சரித ஹேரத், சட்டத்தரணி லலித் பியும் பெரேரா, ஊடகவியலாளர் சஞ்ஜீவ எதிர்மான்ன, சடடத்தரணிகள் மயூர விதானகே மற்றும் பிரேம்நாத் சீ தொலவத்தை ஆகியோர் மாத்திரமே வேட்பாளர்களாக நிறுத்தப்பட உள்ளனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோஷித்த ராஜபக்ச இம்முறை பொதுத் தேர்தலில் திகாமடுல்லை மாவட்டத்தில் போட்டியிடுவார் எனக் கூறப்பட்டாலும் இதுவரை அது உறுதிப்படுத்தப்படவில்லை.
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யவும் அவரை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வர முக்கிய பங்காற்றிய பிரபல வர்த்தகர் திலித் ஜயவீர, பொதுத் தேர்தலில் காலி மாவட்டத்தில் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் அவர் அரசியலில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல பாரிய பங்காற்றி மிலிந்த ராஜபக்சவும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என கூறப்படுகிறது.
அதேவேளை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் பல இளைஞர்களுக்கு இம்முறை வேட்புமனு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் பிரபலமானவராக இருந்த மேஜர் மோன்டி ஜயவிக்ரம மட்டுமல்லாது ஜெனரல் ரஞ்சன் விஜேரத்னவின் பேரனான வெலிகம நகரபிதா ரொஹான் டி ஜயவிக்ரம, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி எராந்த வெலியங்கே, கொழும்பு மாநகர மேயர் ரோஷி சேனாநாயக்கவின் புதல்வர் கனிஸ்க சேனாநாயக்க, முன்னாள் அமைச்சர் ஹேமகுமார நாணயக்காரவின் புதல்வரான சட்டத்தரணி தாரக நாணயக்கார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஸ்டின் கலப்பத்தியின் புதல்வர் சத்துர கலப்பத்தி ஆகிய இளம் அரசியல்வாதிகள் அதில் அடங்குகின்றனர்.