இறுதிப்போரில் நடந்தது திட்டமிட்ட இன அழிப்பே! குற்றவாளிகளை தப்பவிடாதீர்கள்! மாவை வலியுறுத்து

Report Print Rakesh in அரசியல்
231Shares

இலங்கையில் இறுதிப்போரின் போது நடைபெற்றது தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இன அழிப்பேயாகும். எனவே, இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

குற்றவாளிகள் எவரையும் ஐ.நா. தப்பவிடக்கூடாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார் .

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளுடன் இன்று நடத்திய சந்திப்பின் போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை உட்பட்ட அமைப்புக்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் நேரடியாகக் கள ஆய்வை மேற்கொண்டிருந்த முன்னாள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை விசாரணை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கின்றார்.

எனவே, பல்வேறு வகைகளிலும் இலங்கை அரசும் இராணுவத்தினரும் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆதாரங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையினரிடம் உள்ளன.

ஏற்கனவே இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டபோது அந்தத் தீர்மானங்களை முன்மொழிந்த நாடுகளும் ஆதரவளித்த நாடுகளுமே தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டிய விசாரணைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.