சஜித்துக்கு ரணில் காலக்கெடு! யானையில் ஏறி சவாரி செய்ய அழைப்பு

Report Print Rakesh in அரசியல்

ஐ.தே.கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் வெற்றியடைந்துள்ளமைக்கான சான்றுகள் இல்லை. இதனால் சஜித் தரப்பினர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திடுவார்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைச் செய்து பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து வேட்புமனுத் தாக்கல் திகதியும், தேர்தல் திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

பொதுக் கூட்டணி அமைப்பது தொடர்பில் கட்சிக்குள் கலந்துரையாடப்பட்டிருந்தது. அதற்கமைய சஜித் பிரேமதாஸவின் தலைமையில் பொதுக் கூட்டணி அமைப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த போதிலும், அது கூட்டணியாக இல்லாமல் தனித்த கட்சியாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே அனுமதி பெற்றுள்ள கட்சி ஒன்றுக்குப் புதிதாக தலைவர் மற்றும் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐ.தே.க. உறுப்பினர்களும் யானை சின்னத்தில் போட்டியிடுவதையே விரும்புகின்றனர். தற்போது சஜித் தலைமையிலான தரப்பினர் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இவர்கள் அவ்வாறு தனித்துப் போட்டியிடுவார்கள் என்று நான் எண்ணவில்லை.

இதேவேளை, தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு சஜித் தரப்பினருக்கு தற்போது சந்தர்ப்பம் வழங்கியுள்ளார். இதனைக் கருத்திற்கொண்டு அவர்கள் செயற்படுவார்கள் என்று நான் கருதுகின்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி அமைத்து செயற்பட முயற்சித்தவர்கள் கடந்த காலங்களில் வெற்றியடைந்தமைக்கான சான்றுகள் இல்லை. தற்போது பிரிந்து செல்ல முயற்சிப்பவர்கள் இந்த விடயம் தொடர்பில் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

சஜித் தரப்பினர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவின் அனுகுமுறைகளையும், நடவடிக்கைகளையும் பின்பற்றிச் செயற்பட்டிருந்தால் இந்த முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டிருக்காது. அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட்டாலே பொதுத்தேர்தலில் மாபெரும் வெற்றியடைய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.