காணாமல்போனோர் விவகாரத்தில் ஜனாதிபதியின் கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது: சிறீதரன்

Report Print Arivakam in அரசியல்

காணாமல்போனோர் விவகாரத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் கருத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

குமாரசாமிபுரம் மக்களுடனான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. அங்கு வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

இறுதி யுத்தத்தை வழிநடத்தியவர் தற்போது ஜனாதிபதியாக இருக்கிறார். அவரின் தலைமையின் கீழ் இருந்த படையினரிடமே எமது தாய்மார்கள் தங்களது பிள்ளைகளையும், கணவன்மாரை மனைவியரும் கையளித்து இருந்தனர்.

அவர்கள் கண்கண்ட சாட்சியங்கள். யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் ஒப்படைத்த பிள்ளைகளையே நாம் கேட்கிறோம். இவரிடமே ஒப்படைத்தவர்களையே கேட்கிறோம்.

தமிழர்களுக்கு பொருளாதார ரீதியில் தான் பிரச்சினை இருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். தமிழர்கள் இந்த மண்ணிலே உரிமை வேண்டியே போராடிக்கொண்டிருக்கிறோம்.

இதற்காகவே எமது மாவீரர்கள் இரவு பகல் பாராது களங்களில் சமராடி வீரகாவியமானார்கள். 1983ஆம் ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை தீர்மானிப்பவர்களாக தமிழர்களே இருந்தார்கள்.

அவர்களின் பொருளாதாரத்தை முடக்கி எங்களின் பொருளாதார நிலையங்களை எரியூட்டி எங்களின் பொருளாதாரத்தை முடக்கியவர்கள் சிங்கள ஆட்சியாளர்களே.

எமக்கான உரிமைகள் கிடைக்கப் பெற்றால் சுயமாகவே நாம் பொருளாதார ரீதியில் மேலெழும்புவோம்.

எங்களின் பொருளாதாரங்களை மேம்படுத்தும் இடங்களை இராணுவம் கைப்பற்றி இராணுவம் சூறையாடிக் கொண்டிருக்கிறது.

வட்டக்கச்சி பண்ணை தொடக்கம் கஜுத்தோட்டங்கள், கடல் வளங்கள் சூறையாடப்படுகின்றன.

இராணுவத்தினரால் விலைக்கட்டுப்பாடின்றி நடாத்தப்படும் அழகங்கள் இவ்வாறாக எமது வளங்களை கையகப்படுத்தி இருக்கிறார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.