நரகமாக மாற்றிய நாட்டை மூன்று மாதங்களில் சொர்க்கமாக மாற்ற முடியாது: பிரசன்ன

Report Print Steephen Steephen in அரசியல்

ஐந்து வருடங்களாக நரகமாக மாற்றிய நாட்டை மூன்று மாதங்களில் சொர்க்கமாக மாற்ற முடியாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு மினுவங்கொடை உடுகம்பள பிரதேசத்தில் நடைபெற்ற பெண்கள் தின நிகழ்வில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டை கட்டியெழுப்ப நாட்டின் பெண்களின் பங்களிப்பு அவசியம். எதிர்வரும் பொதுத் தேரர்தலில் பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தை அமைத்து, நாட்டை பாதுகாத்து கொள்ள இணையுமாறு பெண்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை அறிக்கையில் விசேட இடம் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறை, சிறார் துஷ்பிரயோகங்களை ஒழிக்க உரிய வேலைத்திட்டத்தை அமுல்படுத்த எண்ணியுள்ளோம்.

கடந்த மூன்று மாதங்களாக எதிர்க்கட்சி எமது காலை பிடித்து இழுத்தது. நாங்கள் அமைக்கும் புதிய அரசாங்கத்தின் ஊடாக பெண்களுக்காக ஜனாதிபதி முன்வைத்துள்ள கொள்கைகளை அமுல்படுத்துவோம்.

கடந்த அரசாங்கம் 5 ஆண்டுகளாக நாட்டை நரகமாக மாற்றியது. 5 ஆண்டுகள் நரகமாக மாற்றிய நாட்டை மூன்று மாதங்களில் கட்டியெழுப்ப முடியாது.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியே கடந்த காலத்தில் நடந்த மிகப் பெரிய கொள்ளை. இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சிறிய திருடர்கள் மாத்திரமே தற்போது சிக்கியுள்ளனர்.

பெரிய திருடர்கள் பிடிப்படவில்லை. திருடர்கள் தப்ப நாங்கள் இடமளிக்க மாட்டோம். கடந்த அரசாங்கம் வெள்ளை ஆடையை அணிந்து கொண்டு வந்தாலும் முழுமையான ஊழல் நிறைந்த அரசாங்கம்.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி நாட்டின் பொருளாதாரத்தை பாதித்தது. தற்போது மக்கள் எதிர்நோக்கும் பொருட்களின் விலை அதிகரிப்பு போன்றவற்றுக்கு நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் தூரநோக்கற்ற பொருளதார வேலைத்திட்டங்கள் காரணமாக நாடு இந்த நிலைமைக்கு உள்ளாகியுள்ளது எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.