பணிகளை செய்ய சுயாதீன ஆணைக்குழுக்கள் தடையாக இருக்கின்றன

Report Print Steephen Steephen in அரசியல்

ஜெனிவா நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சென்று சுயாதீன மனித உரிமை ஆணைக்குழு மற்றும் தகவல் அறியும் ஆணைக்குழு என்பவற்றை மேலும் வலுப்படுத்த போவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, சர்வதேசத்திடம் கூறியிருந்தார்.

எனினும் ஒரு வாரம் செல்லும் முன்னர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதற்கு முரணான கருத்தை வெளியிட்டுள்ளார்.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் காரணமாகவே இந்த இரண்டு ஆணைக்குழுக்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொண்டு 19வது திருத்தச் சட்டம் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களை இரத்து செய்ய எண்ணியுள்ளதாக ஜனாதிபதி நேரடியாக கூறியுள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி ஊடக பிரதானிகளை சந்தித்த போது கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு எந்த ஒத்துழைப்புகளும் கிடைப்பதில்லை எனவும் அவற்றை இரத்துச் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டுமாயின் ஜனாதிபதிக்கு தடையின்றி பயணியாற்ற சந்தர்ப்பம் இருக்க வேண்டும் எனவும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் அந்த சந்தர்ப்பத்தை பறித்துக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் தடைகள் இருக்குமாயின் அப்படியான அரசியலமைப்புச் சட்டம் இருப்பதில் அர்த்தமில்லை.

இதனால், இந்த தடைகளை அகற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியம் எனவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.அத்துடன் தனக்கு குறுக்கீடாக இருக்கும் பயனற்ற இரண்டு ஆணைக்குழுக்கள் பற்றியும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

பொலிஸ் ஆணைக்குழு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை, பொலிஸ் திணைக்களத்தின் பிரதானியான பொலிஸ் மா அதிபரால் இலகுவாக மேற்கொள்ள முடியும்.

மேலும் ஜனாதிபதித் தேர்தலில் தான் வழங்கிய வாக்குறுதிபடி பட்டதாரிகளுக்கு வழங்கி வரும் தொழிற்பயிற்சிகளை நிறுத்த தேர்தல் ஆணைக்குழு எடுத்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பயிற்சி நடவடிக்கைகள் அரசியல் இல்லை எனவும் இது குறித்து தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்துள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

சுயாதீனம் எனக் கூறிக்கொள்ளும் தேர்தல் ஆணைக்குழுவின் ஒரு நபர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஊடகங்கள் வாயிலாக பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டதால், அதன் சுயாதீனத்திற்கு ஏதோ ஒரு தடையேற்பட்டது எனக் கூறியுள்ள ஜனாதிபதி, இப்படியான நிறுவனங்கள் தொடர்பாக அரசியலமைப்புத் திருத்தத்தின் போது ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் இதற்கு முன்னர் எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதிகளோ, பிரதமர்களோ தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானங்களை மாற்ற முயற்சிக்கவில்லை எனவும் ஜனாதிபதி இந்த கருத்துக்கள் மூலம் ஜனநாயக சமூகத்தில் இருக்க வேண்டிய சமநிலையை எந்த வகையிலும் விரும்பவில்லை என்பது தெளிவாகியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் நீதித்துறை சம்பந்தமாக கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி, அமைதியாக இருப்பதை ஒரு பலவீனமாக நாட்டின் நீதிமன்றங்கள் நினைக்கக் கூடாது எனக் கூறிருந்தார்.