கோட்டாபய ராஜபக்ச நியமித்த ஆணைக்குழுவுடன் தொடர்ந்தும் முரண்படும் நீதித்துறை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம்

Report Print Ajith Ajith in அரசியல்

நீதித்துறையும், சட்டமா அதிபர் திணைக்களமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்த ஆணைக்குழுவுடன் தொடர்ந்தும் முரண்பட்டு வருகின்றது.

இந்த ஆணைக்குழு நீதித்துறையில் தலையீடுகளை மேற்கொள்கின்றதென்ற அடிப்படையிலேயே இந்த முரண்பாடு தொடர்கின்றது.

2015ம் ஆண்டு தொடக்கம் 2019 ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்களை விசாரணை செய்ய கோட்டாபயவினால் ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் கொழும்பில் 11 பேரை கடத்தி கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரணாகொட உட்பட்ட 14 கடற்படையினரின் வழக்கு, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிக்கொடவின் கடத்தல் மற்றும் யானை தந்தம் கடத்தல் தொடர்பில் அலி ரொசானின் வழக்கு என்பன முறைப்பாடாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த ஆணைக்குழுவின் பணிப்புரை ஒன்றை ஏற்க சட்டமா அதிபர் மறுத்திருந்தார்.

கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரணாகொட உட்பட்டவர்களின் வழக்கு விசாரணையை தமது விசாரணை முடியும் வரை இடைநிறுத்த வேண்டும் என்றே ஆணைக்குழு சட்டமா அதிபரிடம் கேட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த வாரத்தில் நீதிமன்றத்தை கேட்காமலேயே குற்றப்புலனாய்வுத்துறையினர் குறித்த வழக்குகளின் ஆவணங்களை ஜனாதிபதியின் ஆணைக்குழுவிடம் கையளித்து விட்டனர்.

இதனையடுத்து ஆணைக்குழுவின் செயலாளரை முன்னிலையாகுமாறு மூன்று நீதிபதிகளை கொண்ட மன்றம் உத்தரவிட்ட போதும் அவர் முன்னிலையாகவில்லை.

இதன் காரணமாக அவருக்கு எதிராக நீதிபதிகள் கைது ஆணையை பிறப்பித்துள்ளனர் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகளை தடை செய்வதில் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அதிகாரமில்லை என்பதன் அடிப்படையிலேயே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.