தமிழரின் மனங்களை வெல்லமுடியாமை ஏன்? மனம் திறந்தார் மஹிந்த

Report Print Rakesh in அரசியல்

ஒரு சில அரசியல்வாதிகள் வைராக்கியத்தையும் குரோதத்தையும் விதைத்துள்ளனர். அதனால்தான், வடக்குத் தமிழர்களின் மனங்களை வெல்லமுடியாதுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பத்திரிகைகளின் கட்டுரை ஆசிரியர்கள், அரசியல் பத்தி எழுத்தாளர்கள் மற்றும் கருத்தோவியர்கள் ஆகியோருடன் பிரதமர் அலரி மாளிகையில் நேற்றுக் கலந்துரையாடினார். அதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல திட்டங்களை முன்னெடுத்தீர்கள். வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் போன்ற திட்டங்களின் ஊடாக உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டன.

அப்படிச் செய்தும் ஏன் மக்களின் மனங்களை வெல்லமுடியாமல் போனது.? என்று கலந்துரையாடலில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த பிரதமர் மஹிந்த,

சில அரசியல்வாதிகளால் மக்கள் மத்தியில் வைரமும், குரோதமும் விதைக்கப்பட்டது. உதாரணமாக எம்மிடம் லெம்போஹினி கார் இருப்பதாகக் கூறி, இளைஞர்கள் மனங்களில் பொறாமையை உருவாக்கினர். இப்படி எம்மை இலக்கு வைத்து தெற்கிலும், வடக்கிலும் பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டு, மக்கள் மனங்களில் தவறான விம்பம் உருவாக்கப்பட்டது. இப்படியான செயற்பாடுகளே காரணம்.

2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போதுகூட அதுவே நடைபெற்றது. வாக்களித்த பின்னர்தான் மக்களுக்குத் தெரியவந்தது. அவ்வாறு இல்லாவிட்டால் தேர்தலில் என்னைச் சந்திப்பதற்கு தங்காலை வந்திருக்கமாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.