மாவீரர்களின் எண்ணங்களைச் சுமந்தவர்களாக நாங்கள் பயணிக்க வேண்டும்! கோடீஷ்வரன்

Report Print Varunan in அரசியல்

மாவீரர்களின் எண்ணங்களையும் சிந்தனைகளையும் சுமந்தவர்களாக நாங்கள் ஒன்றாக பயணிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஷ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, வவுணதீவில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இஸ்லாமிய பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் கணேஷ் தினேஷ் உயிரிழந்தது போன்று இஸ்லாமிய தீவிரவாதிகளின் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் இவ்வாறான இளைஞர்களின் உயிர்களை காவு கொடுப்பதற்கு காரணமாக இருந்துள்ளது.

இந்த வகையில் நாங்கள் ஒற்றுமையாக இருந்து செயற்படவேண்டும் தமிழோடும் தமிழ் தேசியத்தோடும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் தமிழ் தேசியத்தை பாதுகாக்க வேண்டும்.

மாவட்டத்தைப் பொறுத்தவரை அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதில் பல சக்திகள் பின்நின்று செயல்படுகின்றன இவற்றுக்கு நாங்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தளவில் இங்கு தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்தால் இங்குள்ள தமிழர்கள் ஏனைய சமூகங்களுக்கு ஆண்டான் அடிமையாக மாறக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இவற்றை நாம் கருத்தில் கொண்டும் இவற்றிலிருந்து நாம் விடுபட வேண்டிய கடமைப்பாடு அம்பாறை மாவட்டத்தில் வாழும் ஒவ்வொரு தமிழ் மகனும் இருக்கின்றது.

பேரினவாத சக்திகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய ஒரு தேர்தல் களமாக இத்தேர்தல் அமைந்திருக்கின்றது. இந்தத் தேர்தல் காலம் என்பது அம்பாறை மாவட்டத்து தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்கின்ற ஒரு தேர்தலாக இருக்கின்றது. இதில் எமது வாக்குரிமையை சிறப்பாக பயன்படுத்தி தமிழ் தேசியத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

இதன் மூலமே எமது இருப்பை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் நாங்கள் எங்களது தலையிலே மண்ணை அள்ளிப்போட வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திவிடும்.

கிழக்கு தமிழ் தலைமை என்ற பிரதேசவாத கருத்துகளை கூறி பலர் களமிறங்கி இருக்கின்றனர். வடக்கு, கிழக்கு என்பது எமது தாயகம், எமது கனவு, நமது சின்னம் என்பது எங்களது குறிக்கோளாக இருக்கின்றது. போராட்ட வரலாறுகள் கூட வடகிழக்கு இணைப்பு அடிப்படையில்தான். ஏன் எமது விடுதலைப் போராட்டம் நடைபெற்றிருந்தது. அதனடிப்படையில்தான் இந்த மண்ணிற்கு அதிக அளவிலான மாவீரர்கள் வித்தானார்கள்.

மாவீரர்களின் எண்ணங்களையும் சிந்தனைகளையும் சுமந்தவர்களாக நாங்கள் ஒன்றாக பயணிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.