பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் மீண்டும் தோல்வியை தழுவியுள்ள ரணில் மற்றும் சஜித் தரப்பு!

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசியகட்சியின் ரணில் தரப்புக்கும், சஜித் தரப்புக்கும் இடையில் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்த இன்று எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோரின் தலைமையில் இந்த இணக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரு ஜெயசூரியவின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இரண்டு தரப்பில் இருந்தும் பெருமளவில் சட்டத்துறை பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

எனினும் இதன்போது ஐக்கிய தேசிய சக்தியின் யாப்பு தொடர்பில் இரண்டு தரப்புக்களும் இணக்கம் காணவில்லை.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய சக்தியின் யாப்பில் திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்று ஏற்கனவே ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியிருந்தார்.

எனினும் இந்த திருத்தங்களை மேற்கொண்டதாக கூறப்படும் பிரதிகள் எதனையும் இன்றைய சந்திப்பின் போது சஜித் தரப்பு முன்வைக்கவில்லை.

இந்த பிரதிகளை இன்றைய சந்திப்பில் கையளிக்க வேண்டாம் என்று சஜித் பிரேமதாச தமது பிரதிநிதிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,அவற்றை தரமுடியாது என்று சஜித்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய சக்தி, ஐக்கிய தேசியக்கட்சியின் யானை சின்னத்தின் கீழ் போட்டியிடவேண்டும் என்று ரணில் தரப்பினர் கோரியுள்ளனர்.

இதனை சஜித் பிரேமதாச தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை.இதனையடுத்து கரு ஜெயசூரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ஐக்கிய தேசியக்கட்சியின் இரண்டு தரப்புக்கும் இடையில் இணக்கத்தை ஏற்படுத்த இரண்டு நாட்களாக சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் தேவை ஏற்படின் மீண்டும் இரண்டு தரப்புக்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்க தயார் என்று கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.