கிழக்குக்கு கொரோனாவை கொண்டுவர ராஜபக்ச அரசுக்கு ஏன் இத்தனை ஆர்வம்..?

Report Print Rakesh in அரசியல்

கிழக்குக்கு கொரோனாவைக் கொண்டு சேர்ப்பிப்பதில் ஏன் ராஜபக்ச அரசுக்கு இத்தனை ஆர்வம்? இதில் மறைமுக நோக்கம் இருக்கின்றது என மக்கள் சந்தேகிப்பதில் நியாயம் இருக்கின்றதென கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை 'கொரோனா' சிகிச்சை நிலையமாக மாற்றுவது குறித்த அரசின் முன்னெடுப்புக்களையிட்டு அவர் கிழக்கு மக்கள் சார்பாக தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக விவகாரம் ஏற்கனவே இனவாத சிந்தனை சர்ச்சைக்குரியதொன்றாக மாறியிருக்கும் சூழ்நிலையில் தற்போது அந்த விவகாரத்தைத் திசை திருப்பும் வண்ணம் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக வளாகத்தை சுவீகரித்து கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை நிலையமாக மாற்றும் தீர்மானத்தை அரசு முன்னெடுத்துள்ளது.

இலங்கையில் ஒதுக்குப் புறமான பொதுமக்களுக்கும் இயற்கைக்கும் கேடு விளைவிக்காத பல இடங்கள் இருக்கும்போது ஏன் சன அடர்த்தி மிக்க இடத்தை அதுவும் முஸ்லிம்கள் வாழும் ஊர்களை மையப்படுத்தியதாக கொரோனா சிகிச்சை நிலையத்தை அரசு வலிந்து உருவாக்க வேண்டும்? இதில் மறைமுக நிகழ்ச்சி நிரலும் சூழ்ச்சிகளும் இருப்பதாக மக்கள் அச்சம் கொள்வதில் நியாயம் இருக்கின்றது.

இந்தப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையை அண்டிய எந்நேரமும் சன நடமாட்டமுள்ள பிரதேசமாகும்.

அது ஒரு புறமிருக்க கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நோயாளியும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

அப்படியெனில் ஏன் அரசு கிழக்கை மையப்படுத்தி கொரோனா சிகிச்சை நிலையத்தை அமைக்க வேண்டும்.

எந்த விடயங்களும் விஞ்ஞானபூர்வமான ஆய்வின் அடிப்படையின்றி இனவாதக் கண்ணோட்டத்துடன் அணுகப்படுமாயின் அது இனவாதிகளுக்குத் தோல்விலேயே முடியும்.

கொழும்பின் புறநகரான வத்தளைப் பகுதியிலுள்ள தொற்று நோய் வைத்தியசாலையொன்றை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையமாக மாற்றும் அரசின் நடவடிக்கைகளுக்கு பிரதேச மக்கள் ஏற்கனவே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த நான்கு தினங்களாக இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வத்தளைப் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையமொன்று அமைக்கப்படுகின்றமையால், தாம் பல்வேறு சுகாதார அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, மட்டக்களப்பிலும் இதுபோன்ற எதிர்ப்புகளை நடத்த மக்கள் முனையலாம்.

ஏற்கனவே மட்டக்களப்பு நகரை அண்டியுள்ள மாந்தீவை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஆய்வு நிலையமாக மாற்றுவதற்கு எடுத்த நடவடிக்கைகளை தமிழ் அரசியல்வாதிகளும், மக்கள் அமைப்புக்களும் பலமாக எதிர்த்ததன் காரணமாக அந்நடவடிக்கைய அரசு கைவிட்டு தற்போது மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசு குறிவைத்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அந்தப் பல்கலைக்கழகம் வளாகத்தை அண்டிய கிராமங்கள் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களாக இருந்தாலும் கொரோனா வைரஸ் கிருமி இன, மத, மொழி பிரதேச வேறுபாடுகள் பார்த்துத் தொற்றிக்கொள்வதில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

எந்தக் கோணத்தில் பாரத்தாலும் இது அரசின் ஏற்புடைய நடவடிக்கை அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.