சர்வதேசத்திடம் இலங்கையை பொறுப்புக்கூற வைப்போம்: சம்பந்தன்

Report Print Rakesh in அரசியல்
110Shares

இறுதிப் போரின் போதும் அதற்கு முன்னரும், அதற்குப் பின்னரும் அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை இலங்கை அரசு பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வரும் நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி தமிழர் தாயகத்தில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், 'இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்த அனைவருக்கும் மறுவாழ்வு வழங்கி விடுவித்து விட்டோம். எவரையும் நாம் காணாமல் ஆக்கவில்லை. அதேவேளை, சரணடைந்த எவரையும் நாம் சுட்டுக்கொல்லவும் இல்லை' என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்களான தமிழ் இளைஞர்கள் சிலரை அலரி மாளிகையில் சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.

அதேவேளை, 'காணாமல் ஆக்கப்பட்டோர் என்று கூறப்படுபவர்கள் இறுதிப் போரில் உயிரிழந்திருக்கலாம் அல்லது வெளிநாடுகளில் இருக்கலாம். எனவே, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை மறந்துவிட்டு முன்னோக்கிச் செல்வதே சிறந்தது' என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது கூறியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் மேற்படி கருத்துக்கள் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தமிழர்கள் மறந்துவிடவே முடியாது. இது மறக்கக்கூடிய விடயம் அல்ல.

இறுதிப் போரின்போதும் அதற்கு முன்னரும், அதற்குப் பின்னரும் அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை இலங்கை அரசு பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும். சர்வதேச சட்டத்தின் பிரகாரம் இந்த விடயத்திலிருந்து அரசு ஒருபோதும் தப்பவே முடியாது.

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் இந்த விடயத்தில் இருந்து அரசு ஒருபோதும் தப்பவே முடியாது. இது தொடர்பில் சர்வதேச அரங்கில் இலங்கை அரசைப் பொறுப்புக்கூற வைத்தே தீருவோம்.

இது தொடர்பில் சர்வதேச அரங்கில் இலங்கை அரசைப் பொறுப்புக்கூற வைத்தே தீருவோம். ஜனாதிபதியும், பிரதமரும் இந்த நாட்டின் தலைவர்கள். இருவரும் தமிழர்கள் விடயம் தொடர்பில் பொறுப்பற்ற விதத்தில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இது ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.