வீணை சின்னத்தில் போட்டியிட சிறீரெலோவுக்கு ஆட்சேபனை இல்லை: டக்ளஸ்

Report Print Theesan in அரசியல்

வீணைச் சின்னத்தில் போட்டியிட சிறீரெலோவுக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்தார்.

நேற்று வாடிவீட்டில் இடம்பெற்ற ஈபிடிபியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில்,

சிறீரெலோ கட்சி மற்றும் ஈரோஸ் உடன் இத்தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது.

ஈரோஸ் கட்சி, ஈபிடிபி சின்னத்துக்கு ஆதரவளித்து வேலை செய்யவுள்ளதாக ஈரோஸ் கட்சியின் தலைவர் துஸ்யந்தன் தெரிவித்திருக்கிறார்.

சிறீரெலோவும் வீணைச்சின்னத்தில் போட்டியிடுவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என நீண்டகாலமாக தெரிவித்து வருகின்றார்கள்.

இந்திய மீனவர்கள், எல்லை தாண்டி வருபவர்கள், அத்து மீறி வருபவர்கள், தடைசெய்யப்பட்ட தொழில் உபகரணங்களை கொண்டு தொழில் செய்பவர்களை அமைச்சு ரீதியான தடைகளை ஏற்படுத்தி வருகின்றேன்.

இதேவேளையில் கடற்படை ஊடாக இந்திய படையினரின் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம்.

வடமராட்சி கிழக்கு பகுதியில் அட்டைத்தொழில் செய்வதற்கு அமைச்சின் அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் அமைச்சின் அதிகாரிகளுக்கு எனக்கு அறிவிக்காமல் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் எனவும், உடனடியாக அதனை தடை செய்யுமாறும் தெரிவித்திருக்கிறேன்.

இந்தியாவிலிருந்து வரும் படகுகள் சட்ட விரோத மீன்படியில் ஈடுபடுகிறார்கள், போதைவஸ்தை கடத்தி வந்து பரிமாறுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதோடு பல்வேறான சட்ட விரோத மீன்பிடி தொடர்பாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆகவே இது தொடர்பாக கடற்படையுடன் கலந்துரையாடி அதனை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்யுமாறும் தெரிவித்திருக்கிறேன்.

இதேவேளை இப்பகுதி இளைஞர், யுவதிகளை உள்ளடக்கிய கரையோர பாதுகாப்பு தொண்டர் படை ஒன்றினை அமைக்குமாறு கடற்படையினரிடம் நான் கேட்டிருந்தேன்.

தற்போது அதற்கு அவர்கள் தயாராகி வருகிறார்கள். ஆகவே அதன் மூலமாக நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகளை வேலைக்கு அமர்த்தலாம். இதனூடாக இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளை இலகுவாக நிறுத்திக்கொள்ள முடியும்.

இந்த நிலையில் எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எனக்கு அதிகளவான மக்கள் ஆணையை வழங்குவார்களேயானால் ஒன்றைரை வருடத்தில் எங்களுடைய மக்கள் எதிர்கொள்கின்ற நியாயமான பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பேன் எனவும் மேலும் தெரிவித்தார்.